IPL 2023: உருண்டு புரண்டு முதல் வெற்றியை பெற்ற டெல்லி... கொல்கத்தாவின் போராட்டம் வீண்!

IPL 2023 DC vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 21, 2023, 12:46 AM IST
  • டெல்லிக்கு அணிக்கு 128 ரன்களை கேகேஆர் இலக்காக நிர்ணயித்தது.
  • வார்னர் தொடரில் தனது 4ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.
  • வெற்றி பெற்றாலும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது.
IPL 2023: உருண்டு புரண்டு முதல் வெற்றியை பெற்ற டெல்லி... கொல்கத்தாவின் போராட்டம் வீண்! title=

IPL 2023 DC vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது. 

சொதப்பிய பேட்டிங்

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கின்போது தொடக்க சரியாக அமையவேயில்லை எனலாம். குர்பாஸ் - மன்தீப் சிங், குர்பாஸ் - ஜெகதீசன் ஜோடிகள் தொடர்ந்து சொதப்பிய நிலையில், கொல்கத்தா இன்றைய போட்டியில் புதிய ஓப்பனர்களை முயற்சித்து பார்த்தது.  ஜேசன் ராய், லிட்டன் தாஸ் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

இருப்பினும், லிட்டன் தாஸ் 4(4) ரன்களில் ஆட்டமிழந்து கொல்கத்தா அணி எதிர்பார்த்த அதிரடி தொடக்கத்தை அளிக்க தவறினார். கடந்த போட்டியில் சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர், இம்முறை டக்-அவுட்டானார். கேப்டன் ராணா 4(7), மன்தீப் சிங் 12(11), ரிங்கு சிங் 6(8), சுனில் நரைன் 4(6) ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், 70 ரன்களில் 6 விக்கெட்டுகளை கேகேஆர் இழந்தது.

மேலும் படிக்க | IPL 2023: விராட் கோலிக்கு வெற்றியை பரிசளித்த சிராஜ்... பரிதாபமாக தோற்றது பஞ்சாப்!

ஆறுதல் அளித்த ரஸ்ஸல்

ஒருபுறம் ராய் அரைசதம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். இருப்பினும், அவரும் 39 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அன்குல் ராய் 0, உமேஷ் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 15.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

அந்த நேரத்தில், நீண்ட நேரம் களத்தில் நின்ற அதிரடி வீரர் ரஸ்ஸல், மிகவும் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தார். அவருக்கு வருண் சக்ரவர்த்தியும் துணையாக இருந்து பார்னர்ஷிப் அமைத்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் வருண் ரன் அவுட்டாக, கேகேஆர் அணி 127 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ரஸ்ஸல் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 38 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா, நோர்க்கியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

தொடர்ந்து, 128 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. வழக்கம் போல் டேவிட் வார்னர் டெல்லிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தாலும், பிருத்வி ஷா 13(11) ரன்கலில் ஆட்டமிழந்து சொதப்பினார். டேவிட் வார்னர் ஒருபுறம் நிதானமாக ரன்களை எடுத்து வர, மிட்செல் மார்ச் 2(9), பில் சால்ட் 5(3) ஆகியோர் முறையே நிதிஷ் ராணா, அன்குல் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

கடைசி வரை பரபரப்பு

வார்னரும், மனிஷ் பாண்டேவும் நிதானமாக விளையாடி சுமார் 5 ஓவர்களில் 26 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது டேவிட் வார்னர் 41 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 57 ரன்களை எடுத்தார். அடுத்து மனிஷ் பாண்டே 21(23) ரன்களுக்கும், அமான் கான் டக் அவுட்டாக டெல்லி அணி 16.2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. 

டெல்லி அணி வெற்றிக்கு 22 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும், அக்சர் பேடல், லலித் யாதவ் ஆகியோர் மிக பொறுமையாக விளையாடினர். நிதிஷ் ராணாவும், வருணும் 17,18ஆவது ஓவர்களை சிறப்பாக வீச 12 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 

போராடி வெற்றி

இந்த ஓவரை குல்வந்த் வீசினார். ஸ்ட்ரைக்கில் இருந்த அக்சர் படேல், முதல் பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுத்த நிலையில், பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், 5 பந்துகளில் 2 ரன்களே தேவைப்பட்டது. ப்ரி-ஹிட்டில் இரண்டு ரன்கள் ஓடி, அக்சேர் படேல் டெல்லிக்கு அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தார். இதன்மூலம், டெல்லி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அக்சர் படேல் 19(22) ரன்களுடனும், லலித் யாதவ் 4(7) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இஷாந்த் சர்மா 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். 

16 ஓவர்கள் சுழற்பந்துவீச்சு

கொல்கத்தாவின் பந்துவீச்சை குறிப்பிட்ட ஆக வேண்டும். முதல் மூன்று ஓவர்கள் மற்றும் கடைசி ஓவரை தவிர மீதம் உள்ள 16 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் பந்துவீசினர். நரைன், வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா, அன்குல் ராய் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி டெல்லி அணிக்கு கடுமையான நெருக்கடியை அளித்தனர் எனலாம். இதில், அன்குல் ராய், நிதிஷ் ராணா, சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

புள்ளிப்பட்டியல்

டெல்லி அணி 6 போட்டிகளில் 5 தோல்வி, 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 போட்டிகளில் 4 தோல்வி 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளன. 

மேலும் படிக்க | IPL 2023: 'சேஸிங் மட்டும் எங்க கிட்ட மறந்துடுங்க' ராஜபாட்டை நடத்தும் கேஎல் ராகுல் டீம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News