ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடந்த 21 ஆம் தேதி டி-20 தொடர் ஆரம்பமானது. முதல் டி20 போட்டி கடந்த புதன்கிழமை இரு அணிகளுக்கு இடையே பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி விளையாடியது. 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின்பு 20 ஓவர் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. 17 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 173 என அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 16 ஓவருக்கு 161 ரன்கள் எடுத்தது. 5 விக்கெட்கள் கைவசம் உள்ள நிலையில், கடைசி 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், கடைசி ஓவரில் இந்திய அணி வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டு விக்கெட்டும் பறிக்கொடுத்தது.
இந்த மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழுந்தாலும், அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடியதால் அணியின் ரன்-ரேட் உயர்ந்தது. 19 ஒவர்கள் முடிவில் மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால், டிஎல்எஸ் முறைப்படி 20 ஓவர் போட்டியை 19 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 137 ரன்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி வெற்றிக்கு 19 ஓவர்களில் 138 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாவது முறையாக 11 ஓவராக (இந்திய வெற்றிக்கு 90 ரன்கள்) குறைக்கப்பட்டது. ஆனாலும் மழை பெய்து வந்ததால், மூன்றாவது முறையாக 5 ஓவராக (இந்திய வெற்றிக்கு 46 ரன்கள்) குறைக்கப்பட்டது.
இறுதியாக மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்தாலும், மீண்டும் மழை வர வாய்ப்புள்ளது எனக்கருதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டத்தை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவு ஆஸ்திரேலியா அணிக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும். ஏனென்றால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இரண்டாது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்திருக்கும். ஆனால் இன்றைய போட்டியின் முடிவால், மூன்று டி20 போட்டி தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
MATCH ABANDONED. Australia will take a 1-0 series lead into the T20 decider at the SCG on Sunday.
The Aussies applaud the dedicated fans who have stayed around to watch in the rain tonight #AUSvIND pic.twitter.com/m73AHjbgR8
— cricket.com.au (@cricketcomau) November 23, 2018
கடைசி போட்டி நவம்பர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் போட்டியில் ஒருவேளை ஆஸ்திரேலியா அணி வென்றால் டி20 போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும். அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடியும். இதனால் டி20 தொடர் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
எப்படி பார்த்தாலும் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் தொடரை வெல்லபோவது இல்லை. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு தொடரை தட்டிச்செல்ல வாய்ப்பு இருக்கிறது.