Hardik Pandya Step Brother Arrest Details: ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் சூழலில் கிரிக்கெட்டுக்கு வெளியே சற்று பரபரப்பான காட்சிகள் நடந்தேறி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சுற்றியே தொடர் தொடங்குவதற்கும் முன்பிருந்து, இப்போது வரை பரபரப்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த வகையில், கிரிக்கெட் உலகிற்கு வெளியே ஹர்திக் பாண்டியாவின் இன்று அடிபட்டது.
ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் குர்னால் பாண்டியா ஆகியோரின் உறவினரான வைபவ் பாண்டியா மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டதுதான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. வைபவ் பாண்டியா தனது சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோரின் வணிக ஒப்பந்தத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக கூறி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைதுக்கான காரணம்
வைபவ் பாண்டியா இன்று கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களின் நிறுவனம் ஒன்றில் ஹர்திக் மற்றும் குர்னால் ஆகியோருக்கு சுமார் 4.3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து 2021ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளனர்.
மேலும் படிக்க | சென்னை அணிக்கு புதிய சிக்கல்! அணிக்கு திரும்பும் டெவோன் கான்வே!
மூவருக்கும் இடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி லாபத்தை சரியாக பிரிக்காமல் தனக்கு அதிக லாபத்தை பிரித்துக்கொண்டதாகவும், ஒப்பந்தத்தை மீறி தனியாக நிறுவனம் தொடங்கியதால் இந்த நிறுவனத்திற்கு லாபம் குறைந்துவிட்டாதகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டியா சகோதரர்கள் புகார் அளித்த நிலையில் இவரை மோசடி வழக்கில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவருக்கும் பாண்டியா சகோதரருக்கும் என்ன தொடர்பு?
வைபவ் பாண்டியாவுக்கும், ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோருக்கும் என்ன தொடர்பு என சரியாக இன்னும் தெரியவில்லை. இருப்பினும் மூவரும் மிக நெருக்கமானவர்கள் ஆவார். மேலும், பாண்டியா சகோதரர்களின் மறைந்த தந்தையான ஹிமான்ஸூ பாண்டியாவை வைபவும் 'அப்பா' என்ற அழைத்து வந்துள்ளார்.
வைபவ் பாண்டியாவுக்கு, கௌரவ் பாண்டியா என்ற மூத்த சகோதரரும் உள்ளார். வைபவ் இன்ஸ்டாகிராம் கணக்கில் பல கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். குறிப்பாக, எம்எஸ் தோனி, சௌரவ் கங்குலி, கைரன் பொல்லார்ட் ஆகியோருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் விளையாடும் ஐபிஎல் போட்டிகளை காண வைபவ் பாண்டியா மைதானங்களுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதிலும் 2022ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றபோது ஐபிஎல் கோப்பையுடன் வைபவ் பாண்டியா புகைப்படம் எடுத்துள்ளார், அதுவும் இன்ஸ்டாகிராமில் இடம்பெற்றுள்ளது. அவருக்கு மொத்தம் பாலோவர்ஸ் 38 ஆயிரம் பேர், கடைசியாக ஏப். 1ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை சுற்றும் பரபரப்பு
முன்னதாக, ஹர்திக் பாண்டியாவை சுற்றியே ஐபிஎல் தொடரில் பரபரப்பான சூழல் நிலவியது. கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டார். தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் பெற்றார்.
மும்பை அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா ஓரங்கட்டப்பட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து, குஜராத் மற்றும் மும்பை மைதானங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டதும் பெரிதாக பேசப்பட்டது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியுற்ற மும்பை அணி, டெல்லி அணியுடனான கடந்த போட்டியில்தான் வெற்றி பெற்றது. தொடர்ந்து மும்பை அணி இன்று வான்கடே மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | ஐபிஎல்லில் ஆமை வேகத்தில் சதம் அடித்த 5 பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ