யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோல் எதுவும் விழவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் மெசூத் ஒஸில் கோலடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு கோலடிக்க போராடிய இத்தாலி அணிக்கு 78-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி வீரர் ஜெரோம் போடெங், பந்தை கையால் தடுத்ததால் இத்தாலிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை சரியாகப் பயன்படுத்திய இத்தாலியின் லியோனார்டோ போனஸி கோலடிக்க, ஸ்கோர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
ஆட்டநேரத்தின் முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருக்க, வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் கோலடிக்காததைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. 18 வாய்ப்புகள் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 7-ம் தேதி மார்சீலியில் நடைபெறும் அரையிறுதியில் பிரான்ஸ் அல்லது ஐஸ்லாந்துடன் மோத உள்ளது.