பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று 31-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் பிரேசில் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தென் அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற உள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய நேரப்படி ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 4.30 மணிக்கு துவக்க விழா நடைபெற உள்ளது.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் இறங்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் 100 அதிகமானோர் பங்கேற்ப்பது, இதுவே முதல் முறையாகும். துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆண்கள் ஹாக்கி ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.