Viral news: பழங்குடி குழந்தைகளுக்காக 18 km தினமும் படகோட்டிச் சென்ற அங்கன்வாடி பெண்

ஏப்ரல் மாதத்திலிருந்து, அலிகாட் மற்றும் தாதரின் குக்கிராமங்களிலிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்புப் பணிகளை அவர் துவங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2020, 12:38 PM IST
  • பச்சிளம் குழந்தைகளுக்காக தினமும் 18 கி.மீ படகோட்டிச் செல்லும் அங்கன்வாடி பெண்.
  • தன்னலமற்ற பொது சேவை புரிகிறார் இவர்.
  • சமூக ஊடகங்களில் மக்கள் ரேலுவின் இந்த சேவையை வியந்து பாராட்டி வருகின்றனர்.
Viral news: பழங்குடி குழந்தைகளுக்காக 18 km தினமும் படகோட்டிச் சென்ற அங்கன்வாடி பெண் title=

தொற்றுநோய் பரவியுள்ள இக்காலம் அனைவருக்கும் கடினமான காலமாக உள்ளது. ஆனால் தேவைப்படும் மனிதர்களுக்கு உதவ பல சாதாரண மனிதர்கள் முன் வந்து தங்கள் செயல்கள் மூலம் நாயகர்களாக நாயகிகளாக உயர்ந்து நிற்கிறார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், மனித நேயம் மண்ணில் நிலைத்து நிற்கும் என்பதை சிலர் தங்கள் நடவடிக்கைகளால் எடுத்துரைக்கிறார்கள்.

அத்தகைய ஒரு அசாத்திய ஆளுமையாகத் திகழ்கிறார், மகாராஷ்டிராவின் நந்தூர்பாரைச் சேர்ந்த அங்கன்வாடி தொழிலாளி ரேலு வசாவே. அவர் ஆற்றும் பணியின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு பற்றிய கதை வைரல் ஆன பின்னர் அவர் ஒரு ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார்.

தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவுவதற்கான முயற்சியாக, ஆறு வயதுக்குட்பட்ட பழங்குடியின குழந்தைகளையும் கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்களையும் கவனித்துக்கொள்ள, ஒவ்வொரு நாளும் அவர் 18 கி.மீ. படகோட்டிச் செல்கிறார். ரேலு நாசிக் நகரைச் சேர்ந்தவர், நர்மதா நதிக்கு அருகில் வளர்ந்தார். அங்கு அவர் நீச்சல் கற்றுக்கொண்டார்.

ALSO READ: மூளை அறுவை சிகிச்சையின் போது Bigg Boss பார்த்துக்கொண்டு விழித்திருந்த நோயாளி

ஏப்ரல் மாதத்திலிருந்து, அலிகாட் மற்றும் தாதரின் குக்கிராமங்களிலிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்புப் பணிகளை அவர் துவங்கினார். மிகவும் தேவையான நேரத்தில் தேவையான பராபரிப்பும் ஊட்டச்சத்தும் இவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்ற நல்ல சிந்தனைதான் இவரது இந்த செயலுக்கான உந்துதல்.

ஒரு அங்கன்வாடி உறுப்பினராக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது தாய்மார்களின் எடை, ஆரோக்கியம் மற்றும் சரியான வளர்ச்சியை அவர் தொடர்ந்து சோதித்துப் பார்க்க வேண்டும். மேலும் “ஒவ்வொரு நாளும் அப்பகுதிகளுக்கு படகோட்டி செல்வது எளிதல்ல. நான் மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் என் கைகளில் அதிகமான வலி இருக்கும். ஆனால் அது எனக்கு கவலை இல்லை. குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமை சரியாகும் வரை நான் இந்த குக்கிராமங்களுக்குச் சென்று இவர்களுக்கு தேவையானதை செய்வேன்” என்று ரேலு ANI இடம் கூறினார்.

இந்த தொற்றுநோய்களின் போது பழங்குடியினர் அவரை மிகவும் பாராட்டினர். இப்போது அவரது பணி பற்றிய செய்தி, முதலமைச்சரின் அலுவலகத்தையும், நந்தூர்பார் ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாகியையும் அடைந்துள்ளது. அங்கு முதல்வர் சார்பாக அவர் செய்த சிறந்த பணிக்காக அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டப்பட்டார்.

ஐ.பி.எஸ் அதிகாரி தீபன்ஷு கப்ராவும் ரேலுவின் முயற்சியைப் பாராட்டி தனது ட்வீட்டில், “இவர்தான் தொலைதூர கிராமங்களில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டிருக்கும் மகாராஷ்டிராவின் ரேய்லா வசாவே. இவர் ஒரு அங்கன்வாடி தொழிலாளியாக வேலை செய்கிறார். ஒவ்வொரு நாளும் 18 கி.மீ படகில் சவாரி செய்து குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் பராமரிப்பில் கவனம் எடுத்துக்கொள்கிறார். இந்த பயணத்தை தினமும் நிறுத்தாமல் அவர் மேற்கொண்டு வருகிறார். அவரது நல்லுள்ளம், பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி” என்று எழுதினார். மேலும் அவர், #IndiaSalutesYou என்ற ஹேஷ்டேக்கையும் வெளியிட்டார்.

சமூக ஊடகங்களில் மக்கள் ரேலுவின் இந்த சேவையை வியந்து பாராட்டி வருகின்றனர். 

Trending News