கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி 'காலா' படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் பதிவு செய்து இருந்தார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.
டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் தனுஷ். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Due to the demise of respected Jagadguru Poojyashri Jayaendra Saraswati Shankaracharya, as a mark of respect Kaala teaser will be released on 2nd March. Apologies to all the fans who were eagerly waiting for the teaser.
— Dhanush (@dhanushkraja) February 28, 2018
இந்த தள்ளிவைப்பு அறிவிப்பில் டீசர் ரிலீஸ் மார்ச் 2 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, ரசிகர்களை அதிகமாகக் காக்க வைக்காமல் நாளை காலையே வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.