மக்களவை எதிர்வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 முகப்புத்தக பக்கங்களை முடக்கியுள்ளது அந்நிறுவனம்!
மக்களவைத் தேர்தலையொட்டி முகப்புத்தக கணக்குகளின் மூலம் வதந்திகள் பரவாமல் இருக்க அந்நிறுவனம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முகப்புத்தகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய சுமார் 687 பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது.
தங்கள் அடையாளங்களை மறைத்து வேறு ஒருவர் பெயரில் முகநூல் பக்கங்கள் துவக்கப்பட்டுள்ளதாக முகப்புத்தகம் இது தொடர்பான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் முகப்புத்தக நிறுவனம், அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு புதிய கட்டுபாடு விதித்திருந்தது. அத்துடன் தங்களது தளத்தை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது முகப்புத்தகம் நிறுவனம் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவிற்கு தொடர்பான 687 பக்கங்களை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் பக்கங்களின் நம்பகத்தன்மையில்லாத செயல்பாட்டால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முகப்புத்தக நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கை அதிகாரி நாதனியல் கிளெய்சர் தெரிவிக்கையில்,.. "இந்தப் பக்கங்களில் போலி கணக்குகள் பல இணைந்துள்ளன. அத்துடன் இப்பக்கங்கள் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை இல்லாததால் அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம். இந்தப் பக்கங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு தொடர்புடையாது என்பது உறுதியாகியுள்ளது.
எங்கள் தளத்தில் இயங்கி வரும் இது போன்ற போலி கணக்குகள் மற்றும் பக்கங்கள் மீது நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவிலிருந்து முகப்புத்தக தளத்தில் செயல்பட்டு வந்த 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகள் அந்நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.