எஸ்.பி.பாலசுப்ரமணியன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் (1946) ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு இசைக் கலைஞர். இவர் ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவராவர். இவர் காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
முதன் முதலில் 1966-ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் வரிசையாக பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.பி.பி.இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.