தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பிகார், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஏற்பட்ட புழுதிப் புயல், இடி மின்னலுடன் கூடிய மழையால் 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை - இரவு வேளையில் திடீரென புழுதிப் புயல் தாக்கியது. மணிக்கு 109 கிமீ வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. இதில் மரங்கள் விழுந்ததில் டெல்லியில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர். மேலும், 18 பேர் காயமடைந்தனர்.
திடீரென ஏற்ப்பட்ட புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் தரையிறங்க வேண்டிய 40 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மெட்ரோ ரயில் சேவையிலும் 30 நிமிடங்களுக்கு தடங்கல் ஏற்பட்டது.
டெல்லி தவிர நாடியா, ஹெளரா ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிறுவர் உள்பட 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியல் 18 பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், கடப்பா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது, இதில் விவசாயிகள் 5 பேர் உள்பட 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டரில், நாடு முழுவதும் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Sad to hear of loss of lives due to rain and thunderstorms in different parts of the country. Condolences to those bereaved. Thoughts with fellow citizens who have been affected, especially little children #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) May 13, 2018
இதுதொடர்பாக மோடி டிவிட்டரில்,நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Saddened by the loss of lives due to storms in some parts of the country. Condolences to the bereaved families. I pray for the speedy recovery of those injured. Asked officials to provide all possible assistance to those affected.
— Narendra Modi (@narendramodi) May 13, 2018