இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் தோனியின் பெயரை சேர்க்கவில்லை.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார். மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது யுவராஜ் சிங் அவரது ஆல் டைம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். அதில் டாப் ஆர்டரில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பராக கில்கிறிஸ்ட் இடம் பெற்றுள்ளனர். ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்களாக வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு யுவராஜ் தனது ஆல்-டைம் சிறந்த பிளேயிங் அணியை தெரிவித்துள்ளார்.
உலகின் மிக சிறந்த கேப்டனாகவும், சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராகவும் இருக்கும் தோனியை பழைய வன்மத்தின் காரணமாக யுவராஜ் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.