தபால் அலுவலகம்: சிறிய சேமிப்பின் பெரும் சேமிப்பு, இந்த திட்டம் 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கான தொகையை திரும்பக் கொடுக்கும். பணமும் பாதுகாப்பாக இருக்கும்...
தபால் அலுவலக RDகளின் நன்மைகள்: நாடு தற்போது COVID19 தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை எதிர்கொள்கிறது. இந்த நேரத்தில், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது மக்களுக்கு மிகப் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. பங்குச் சந்தையில் அதிக வருவாயுடன், ஆபத்தும் சேர்ந்தே வரும் என்பதையும் முதலீட்டாளர்கள் உணர்ந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்துடன் கூடிய திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியம்.
குறிப்பாக மாதந்தோறும் ரூ .2,000 முதல் 5,000 வரை சேமிக்கக்கூடிய முதலீட்டாளர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாத வருமானம் கிடைக்கும் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது முக்கியம். முதலீடு செய்யும் பணமும் பாதுகாப்பாக இருக்கும். அஞ்சலகத்தின் அதாவது தபால் நிலையத்தின் தொடர் வைப்புத்தொகை (Recurring Deposit) என்பது உங்கள் வைப்புத்தொகையின் வட்டி முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும் ஒரு திட்டமாகும். பணமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். தபால் நிலையத்தின் Recurring Depositஇல் முதலீடு செய்து லட்சக்கணக்கான தொகையை சேர்க்கலாம்.
Also Read | PUBG Mobile விளையாட்டு ஆர்வலர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
தபால் அலுவலகம் Recurring Deposit ஐந்து ஆண்டுகளுக்கானது. அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகு தான் முதிர்வு காலம் வரும். ஆனால், இதை 5-5 ஆண்டுகளாக மேலும் நீட்டிக்க முடியும். மாதந்தோறும் குறைந்தது 100 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். வைப்புத்தொகை 10 ரூபாயின் மடங்காக அதாவது, 10, 20, 30.. ரூபாய் என்று இருக்க வேண்டும். பணத்தை முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
ஒரு முதலீட்டாளர் தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit) 3000 ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்ச்சியாகும் காலத்தில் இந்த தொகை சுமார் ரூ .2,09,090 லட்சம் இருக்கும். இந்தியா போஸ்டின் வலைத்தளத்தின்படி, தபால் அலுவலக ஆர்.டி.க்கு ஆண்டுதோறும் 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது. கூட்டு வட்டியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.
அஞ்சல சிறு சேமிப்பு திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானவை. ஏனென்றால், தபால் துறை பணத்தை திருப்பித் தரத் தவறினால், அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு இறையாண்மை உத்தரவாதம் உள்ளது. அஞ்சல் துறை முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தரத் தவறினால், அரசாங்கம் முன்னோக்கிச் சென்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கிறது. தபால் அலுவலக திட்டத்தில் செலுத்தப்படும் பணம் அரசாங்கத்தால் அதன் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் அஞ்சல திட்டங்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. மறுபுறம், வங்கியில் உங்கள் பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதில்லை. ஒரு வங்கி நட்டம் அடைந்தால், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் திரும்பக் கொடுப்பதாக DICGC உத்தரவாதம் அளிக்கிறது. இந்த விதி வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இதில் வைப்புத்தொகை மற்றும் வட்டி இரண்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.டி கணக்குகளை தனியாகவும், கூட்டாகவும் திறக்க முடியும். கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் 3 பெரியவர்கள் இருக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களில் தொடங்கப்படும் கணக்குக்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம். ஆர்.டி.யின் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தாலும், ஐந்தாண்டு கால அடிப்படையி நீட்டிக்க முடியும். கணக்கு திறக்கும் போது நாமினேஷன் செய்யும் வசதியும் உள்ளது. ஆர்.டி கணக்கைத் திறந்த நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சி காலத்திற்கு முன்னரே கணக்கை மூடுவது தொடர்பான தெரிவையும் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் ஆர்.டி கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாம். சரியான நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது 100 ரூபாய்க்கு 1 ரூபாய் என்ற வீதத்தில் இருக்கும். ஒரு வருடத்திற்குப் பிறகு வைப்புத்தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறுவதற்கான வசதியும் உள்ளது. இந்த கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தலாம். IPPB சேமிப்புக் கணக்கு மூலம் ஆன்லைனில் டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது.