புதுடெல்லி: இந்தியாவில், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம், தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. மறுபுறம் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்து வருகின்றது.
இந்த தொற்றுக்கு எதிராக நமக்கு மிக முக்கியமான கேடயங்களாக இருப்பவை நமது முகக்கவசங்களாகும். எனினும், அவற்றை ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றால், அவற்றை அணிவதால் எந்த பயனும் இருக்காது. முகக்கவசம் அணியும்போது எப்படி அணிய வேண்டும், எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது என்று இங்கே பார்க்கலாம்.
முகக்கவசங்களை நாம் அனைவரும் அணிந்தாலும், அவற்றை எப்படி சரியான முறையில் அணிய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம். இதனால், பலர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுக்கு ஆளாகிறார்கள். முகக்கவசங்களை அணியும் போது பின்வரும் 5 தவறுகளை கண்டிப்பாக செய்யாதீர்கள்.
முகக்கவசத்தை அணிந்தபின்னர், பலர் அதை மீண்டும் மீண்டும் தொடுவதை நாம் அடிக்கடி பார்கிறோம். இது மிகப்பெரிய தவறாகும். முகக்காசத்தின் வெளிப்புறத்தில் நோய்த்தொற்று பரவும் வைரஸ்கள் இருக்கலாம். எனவே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் தொடுவது ஆபத்தை விளைவிக்கும். மேலும், ஒரே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் அணிய வேண்டாம். ஏனென்றால் நாம் முகக்கவசத்தை அகற்றி கிருமி உள்ள இடத்தில் வைத்தால், அதை மீண்டும் அணிவதன் மூலம், தொற்று மூக்கு மற்றும் வாய் வழியாக உடலில் நுழைய வாய்ப்புள்ளது.
மூக்கை கூட மூடாமல் சிலர் முகக்கவசம் அணிகிறார்கள். இது பெரிய தவறாகும். அமெரிக்காவின் சி.டி.சி (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்) படி, மூக்கு, வாய் மற்றும் கன்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய முகக்கவசத்தை தான் மக்கள் அணிய வேண்டும். முகக்கவசம் முகத்தில் நன்றாக பொருந்த வேண்டும். முகக்கவசத்தை சரியாக அணியாவிட்டால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
உங்கள் முகக்கவசத்தை தொட்ட பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பும், அதை நீக்கிய பின்னும், கைகளை நன்கு சோப்பு நீரில் அல்லது ஒரு சானிட்டீசர் மூலம் சுத்தம் செய்வது மிகவும் முக்கியமாகும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு கைகளைக் கழுவுவது முகக்கவசத்தில் தொற்று வைரஸ் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் முகக்கவசத்தை அகற்றிய பின், உங்கள் கைகளைக் கழுவுவது முகக்கவசத்தில் வைரஸ் இருந்தாலும் அதை நீங்கள் பரப்பாமல் இருப்பதை உறுதி செய்யும்.
முகக்கவசத்தை அணிவது மட்டும் போதாது. சுத்தமான முகக்கவசத்தை அணிவது முக்கியமாகும். டிஸ்போசபில் முகக்கவசங்களுக்கு இது தேவையில்லை. ஆனால் நீங்கள் துணியால் ஆன மறுபயன்பாட்டு முகக்கவசத்தைப் பயன்படுத்தினால், அவற்றை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பால் நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர வைக்க வேண்டும். சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் முகக்கவசத்தை அணிவது தொற்றுநோயை அதிகரிக்கும்.
கோடைகாலத்தில் அடிக்கடி வியர்ப்பதால் நீண்ட நேரம் முகக்கவசத்தை அணிவதால் முகக்கவசம் ஈரமாகிவிடும். முகக்கவசம் ஈரமாகிவிட்டால், உடனடியாக அதை மாற்றவும். கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க ஈரமான முகக்கவசம் பயனுள்ளதாக இருக்காது என்று WHO அறிவுறுத்தியுள்ளது. எனவே முகக்கவசம் ஈரமாகி விட்டால் அதை உடனடியாக மாற்றி விடவும். (குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)