IPL Latest News: ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் நேரடியாக காண வரும் பார்வையாளர்கள் தங்களின் செல்லப்பிராணிகளுடனும் வந்து ஆட்டத்தை ரசிக்கலாம். இதுகுறித்த முழு விவரத்தையும் இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
கிரிக்கெட் போட்டிகளை காண வருபவர்கள் தங்களின் செல்லப்பிராணிகளை வீட்டில் தனியாகவோ அல்லது வெளியில் கட்டணம் செலுத்தி ஒருவரின் மேற்பார்வையில் விட்டு வருவது இதன் மூலம் தவிர்க்கப்படும்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பலருக்கும் குடும்ப உறுப்பினர்கள் போன்றது. அவர் சாப்பிடுவது, தூங்குவது, வெளியில் ஷாப்பிங் செல்வது, வாக்கிங் செல்வது என அனைத்திலும் நாயையும் அழைத்து செல்வார்கள். தங்களின் செல்ல நாய்களை அனுமதிக்காத இடங்களை பெரும்பாலும் அவர்களும் புறக்கணித்துவிடுவார்கள்.
அந்த வகையில், ஐபிஎல் போன்ற பெரிய தொடர்கள் நடைபெறும் மைதானங்களில் நாய்களை அழைத்து வருவது இயலாத காரியம். ஆனால், தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நீங்கள் உங்கள் செல்லப்பிராணியுடன் அமர்ந்து போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆம், 2019இல் முதல்முறையாக கொண்டு வரப்பட்ட இந்த 'Dog Out' பகுதி தற்போது மீண்டும் இந்த முறை அந்த மைதானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நாய்களின் உரிமையாளர்களுக்கு சொகுசான இருக்கை கொடுக்கப்படும். அங்கிருந்து தனது நாயுடன் அவர் போட்டியை கண்டு ரசிக்கலாம்.
இந்த பகுதியில் அனைத்து வகை நாய்களுக்கும் அனுமதி உண்டு. அங்கு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம். போட்டியின் போது உரிமையாளருக்கும், நாய்க்கும் உணவு மற்றும் தண்ணீர் அங்கு கிடைக்கும்.
நாய்களை வளர்க்கும் கிரிக்கெட் விரும்பிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகவும் இருக்கும். தனது செல்ல நாயுடன் மைதானத்தில் அமர்ந்து தனக்கு பிடித்த அணியின் ஆட்டத்தை பார்ப்பது என்பது சிறந்த அனுபவம்தான்.
இதுகுறித்து ஆர்சிபி அணியின் துணை தலைவர் ராஜேஷ் மேனன் கூறுகையில்,"எங்களின் ஹோம் மைதானத்தில் Dog Out பகுதியை கொண்டுவந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளோம். இதன்மூலம், உங்களின் செல்லப்பிராணியுடன் மறக்க முடியாத நினைவுகளை நீங்கள் சேர்க்கலாம். பல ரசிகர்கள் வீட்டில் தங்களின் செல்லப்பிராணிகள் இருப்பதால் மைதானத்தில் வந்து போட்டியை காண முடியாத நிலையில் உள்ளனர். இப்போது அவர்களால் மைதானத்திற்கு வந்து எந்த தொந்தரவும் இல்லாமல் தங்களின் செல்லப்பிராணிகளுடன் அமர்ந்து கிரிக்கெட்டை கண்டு ரசிக்கலாம்" என்றார்.
பெங்களூரு சின்னசாமி மைதானம் ஆர்சிபி அணியின் ஹோம் மைதானம் ஆகும். ஆர்சிபி அணி மொத்தம் 7 போட்டிகளை இங்கு விளையாடும். ஏற்கெனவே, பஞ்சாப் அணியுடன் ஒரு போட்டி அங்கு முடிவைடந்துவிட்ட நிலையில், இன்று கொல்கத்தாவுடன் ஒரு போட்டி உள்ளது. இன்றைய போட்டியை தவிர்த்து மீதம் 5 போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.