தமிழகத்தில் அரசுக்கு சொந்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகள் தொடர்பாக சில விதிகளை அரசு அவ்வப்போது மாற்றி வருகிறது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர், மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது. மதுபிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டு செல்வதால் பலருக்கும் தொந்தரவாக உள்ளது.
பல சமயங்களில் இந்த உடைந்த பாட்டில்கள் கால்நடைகள் மற்றும் மனிதர்களை காயப்படுத்துகிறது. மேலும் சுற்றுசூழலுக்கு தீங்குவிளைவிக்கிறது. இதனால் நீதிமன்றத்தின் உதவியுடன் தமிழக அரசு புதிய யோசனை கொண்டு வந்துள்ளது.
காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திருப்பி செலுத்தினால் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 பெற்று கொள்ளலாம். மலைப்பிரதேசங்களில் உள்ள டாஸ்மாக்கில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது.
இதை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு, 45 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை என்பதை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.