IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு இந்த மூன்று வீரர்களை சிஎஸ்கே விடுவிக்கும்பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இவர்களை கொத்தித் தூக்க கடுமையாக முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது உறுதியாகிவிட்டால், யார் யார் எந்தெந்த அணிகள் தக்கவைக்கிறது என்பது உறுதியாகிவிடும்.
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது உறுதியாகவில்லை என்றாலும், 4-7 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ், ஜடேஜா, தூபே, பதிரானா, கான்வே, தோனி உள்ளிட்டோரை தக்கவைக்க முயற்சிக்கும்.
தோனி அடுத்த சீசனில் விளையாடுகிறாரா இல்லையா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. அவரை Uncapped வீரராக தக்கவைக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், சென்னை அணி விடுவிக்கும் வீரர்கள் மேல் எப்போதும் மும்பை அணிக்கு ஒரு கண் இருக்கும். மைக்கல் ஹசி, பியூஸ் சாவ்லா ஆகியோரை சென்னை அணி விடுவித்தபோது மும்பை அணி அவர்களை கடந்த காலங்களில் எடுத்திருக்கிறது. சென்னை அணியும் பிராவோ, ஹர்பஜன், ராயுடு உள்ளிட்டோரை மும்பை விடுவித்தபோது எடுத்ததையும் நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில், 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு இந்த மூன்று வீரர்களை சென்னை அணி விடுவிக்கும்பட்சத்தில், அவர்களை கொத்தித் தூக்குவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டும் அவர்களை இதில் காணலாம்.
சமீர் ரிஸ்வி: இவரை தக்கவைக்கவே சிஎஸ்கே அணி அதிக முயற்சி எடுக்கும். ஒருவேளை Uncapped வீரராக தோனியை சிஎஸ்கே தக்கவைத்தால் இவரை விடுவிக்க வேண்டிய நிலைமை வரலாம். அப்படியென்றால், பொல்லார்ட் இடத்திற்கு இந்திய ஹிட்டராக சமீர் ரிஸ்வியை வளர்த்தெடுக்க மும்பை அணி விரும்பும். எனவே, இவர் மீதும் மும்பை அணி அதிக ஆர்வம் காட்டும்.
ரச்சின் ரவீந்திரா: கான்வேவை தக்கவைக்கும்பட்சத்தில் இவரை சிஎஸ்கே விடுவித்துதான் ஆக வேண்டும். அப்படியென்றால் மும்பை அணி ஓப்பனிங் ஸ்பாட்டிற்காக இவரை கைப்பற்ற நினைக்கும். மும்பை ஆடுகளம் ரவீந்திராவுக்கு ஏதுவான ஒன்று என்பதாலும் அவர் தனது ஆட்டத்தை மேருகேற்றி வருவதாலும் இவர் மீது முதலீடு செய்ய மும்பை அணி தயக்கம் காட்டாது எனலாம்.
மிட்செல் சான்ட்னர்: மும்பை அணியில் போட்டியை மாற்றக்கூடிய தரமான ஸ்பின்னரின் தேவை அதிகரித்திருக்கிறது. பியூஷ் சாவ்லா மட்டும் அதற்கு போதாது. எனவே, ஒரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரை ஏலத்தில் கைப்பற்ற மும்பை துடிக்கும். சிஎஸ்கே அணியில் பல ஆண்டுகளாக இருந்து ஜடேஜா இருப்பதால் பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லாமல் தவித்த மிட்செல் சான்ட்னருக்கு மும்பை எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கும். அத்தகைய உலகத்தர ஸ்பின்னரை கைப்பற்றிவிட்டால், தங்களின் காம்பினேஷனில் பெரிய ஓட்டையை மும்பை அடைத்துவிடும் எனலாம்.