மறைந்த விஜயகாந்த் குறித்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வரும் இந்த வேளையில், நடிகர் யூகி சேது விஜயகாந்த் உடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்லிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவருடையை உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திலேயே நாளை மாலை (டிச. 29) நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பல இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமான ரமணா விஜயகாந்தின் திரைவாழ்வில் ஒரு முக்கிய படமாகும். அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யூகி சேது நடித்திருந்தார்.
விஜயகாந்தின் மறைவையொட்டி இன்று ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் நேரலையில் யூகி சேது அவருடனான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அப்போது, விஜயகாந்த் அரசியல் வருகையின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றையும் பகிர்ந்தார்.
அதில் பேசிய அவர்,"ஒருமுறை விஜயகாந்திடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'சார், எனக்கு சிவகுமார் என்ற நண்பர் இருக்கிறார், அவர் ஜோதிடர். அவர் அடிக்கடி சொல்வார், விஜயகாந்த் அரசியலுக்கு வருவார், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று' இதை விஜயகாந்தின் காதில் போட்டுவைத்தேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"பின்னர் அவர் கட்சி தொடங்குவதற்கு ஒரு ஆறு மாதங்கள் முன்னர் என்னை விஜயகாந்த் போனில் அழைத்து, அந்த ஜோசியர் நண்பரை பார்க்க வேண்டும் என கேட்டார். நானும் அவரின் தொடர்புஎண்ணை கொடுத்தேன்" என்றார்.
மேலும் அவர்,"அந்த ஜோசியர் சொன்னதுபோல், விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பது நடந்தது" என்றார். இன்று காலையில் இருந்து ரமணா படத்தில் விஜயகாந்த் பேசிய வசனங்கள் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.