Pongal 2025 Holidays: பொங்கலுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் ஆகியவற்றை தொடர்ந்து தமிழக அரசால் மக்களுக்கு 9 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை (Pongal 2025) ஒட்டி 5 நாள்கள் ஏற்கெனவே அரசு விடுமுறை என்றாலும், இடைப்பட்ட ஒருநாளும் தற்போது அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு (Pongal Special Gift Pack), வேட்டி சேலை ஆகியவற்றை ரேசன் அட்டைத்தாரர்களுக்கு அறிவித்துள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அதன் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் உத்தரவிட்டது.
2025 இந்தாண்டு தமிழ்நாட்டில் வரும் ஜன.14ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) அன்று தைப் பொங்கல் பண்டிகை (Pongal 2025) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொங்கலுக்கு பின்னர் ஜன.17ஆம் தேதியும் அரசு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து செய்திகுறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தைப் பொங்கலை தொடர்ந்து ஜன.15, ஜன.16, ஜன.18, ஜன.19 ஆகிய நாள்களும் அரசு விடுமுறை (Pongal Government Holidays) நாட்கள் என்பதாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
இதற்கு இடைப்பட்ட நாளான ஜன.17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பில் இருந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்ததாக அந்த அறிக்கையில் அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஜன.17 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜன. 25 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை நீங்கள் ஜன.13ஆம் தேதி மட்டும் தனிப்பட்ட விடுப்பு எடுத்துக்கொண்டால், ஜன. 11ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, ஜன. 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அதாவது 9 நாள்களுக்கு விடுமுறை கிடைக்கும்.