Major Changes From October 1, 2024: இன்று அக்டோபர் மாதம் பிறந்துவிட்டது. இன்று முதல் சில பெரிய விதிகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழந்துள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், பிபிஎஃப், டிடிஎஸ் ஆகியவை அடங்கும். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் இந்த மாதம் வரக்கூடும். அக்டோபர் மாதத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? மக்கள் மீது இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
பண்டிகைக் காலம் தொடங்கும் முன், அக்டோபர் முதல் நாளிலேயே மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்துள்ளது. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.48.5 அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று, அதாவது அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. எனினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆதார் எண்ணுக்குப் பதிலாக ஆதார் பதிவு ஐடியைக் குறிப்பிட அனுமதிப்பதை நிறுத்துவதற்கான மத்திய அரசின் முடிவு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல், தனிநபர்கள் பான் கார்டுக்கான ஆவணங்களிலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போதும் தங்கள் ஆதார் பதிவு ஐடியை குறிப்பிடத் தேவையில்லை.
ஒழுங்கற்ற பொது வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப் கணக்கை (PPF Account) முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி திட்டம் (Sukanya Samriddhi Yojana) மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய விதிகள் அக்டோபர் 1, 2024 முதல் செயல்படுத்தப்படும். நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளில், சிறார்களின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துதல், பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐகளால் பிபிஎஃப் கணக்குகளை நீட்டித்தல் ஆகியவை குறித்த மாறுதல்கள் அடங்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தொடர்பான சில மாற்றங்களை மத்திய பட்ஜெட் 2024 இல் அறிமுகப்படுத்தினார். சில மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும். மூலத்தில் வரி விலக்குகள் (டிடிஎஸ்) தொடர்பான குறிப்பிடத்தக்க புதுப்பிப்பு செவ்வாய்க்கிழமை, அதாவது இன்று முதல் முதல் நடைமுறைக்கு வரும். குறிப்பிட்ட மத்திய மற்றும் மாநில அரசு பத்திரங்களுக்கு 10% TDS பொருந்தும். கூடுதலாக, ஆயுள் காப்பீட்டு பாலிசி, வீட்டு வாடகை செலுத்துதல் போன்றவற்றுக்கான டிடிஎஸ் செலுத்துதல் செவ்வாய்க்கிழமை முதல் மாற்றப்படும்.
பங்குச்சந்தையில் ஃப்யூசர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் செக்யூரிடி பரிவர்த்தனை வரி (STT), செவ்வாய், 1 அக்டோபர் முதல் மாற்றப்ப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் விற்பனை மீதான STT பிரீமியத்தில் 0.0625% முதல் 0.1% வரை அதிகரிக்கும். ஃப்யூசர்ஸ் விற்பனை மீதான STT வர்த்தக விலையில் 0.0125% முதல் 0.02% வரை உயரும்.
HDFC வங்கியின் கிரெடிட் கார்டு விதிகளில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. HDFC வங்கியின் சில கிரெடிட் கார்டுகளுக்கான லாயல்டி திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, HDFC வங்கி SmartBuy தளத்தில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்டு புள்ளிகளை ஒரு காலண்டர் காலாண்டில் ஒரு தயாரிப்பு என்று மட்டுப்படுத்தியுள்ளது.
பிபிஎஃப், செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அக்டோபர் 1 முதல் தொடங்கும் மூன்றாவது காலாண்டில் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. இது சிறு சேமிப்பு திட்டங்களின் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏடிஎஃப் விலையும் இன்று முதல் குறைந்துள்ளது. 5,883/கிலோ லிட்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்திலும், ஏடிஎஃப் விலை லிட்டருக்கு ரூ.4,495.48 குறைக்கப்பட்டது.
அக்டோபர் 1 முதல் உங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை நீங்கள் ஒப்படைத்தால், அதிக பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) அக்டோபர் 1, 2024 முதல் டிரெடிஷனல் எண்டோமென்ட் பாலிசிகளுக்கு அதிக சிறப்பு சரண்டர் மதிப்பை (SSV) வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்ப்டுகின்றது. டிஏ உயர்வுக்கு (DA Hike) பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதுயதாரர்களின் அலவிலை நிவாரணம் 53%-54% ஆக அதிகரிக்கும்.