சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி கடந்த மினி ஏலத்தில் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் என பல முக்கிய வீரர்களை எடுத்து 2024 சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அந்த வகையில், 2025 சீசனிலும் (IPL 2025) அதே வெற்றிப் பயணத்தை சன்ரைசர்ஸ் அணி தொடர விரும்பும் என்பதால் அந்த அணி தற்போதை வீரர்களில் இந்த 4 பேரை மெகா ஏலத்தை முன்னிட்டு நிச்சயம் தக்கவைக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad) கடந்த 2024 சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடி ஓப்பனிங், கிளாசனின் அசைக்க முடியாத மிடில் ஆர்டர் பேட்டிங், பாட் கம்மின்ஸின் கேப்டன்ஸி ஆகியவை அதற்கு முக்கிய காரணம் எனலாம்.
கடந்த மினி ஏலத்தில் முக்கிய வீரர்களை தூக்கியதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி அதே அணியை தக்கவைக்க நினைக்கும். இன்னும் எத்தனை பேரை தக்கவைக்கலாம் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்படாவிட்டாலும் எஸ்ஆர்ஹெச் அணி யார் யாரை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது.
மெகா ஏலத்திற்கு (IPL 2025 Mega Auction) முன் 4 வீரர்கள் தக்கவைக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் வருகின்றன. ஏலத்தில் 2 RTM கார்டுகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் வரம்பு ஏதுமின்றி எந்த 4 வீரர்களை வேண்டுமானாலும் தக்கவைக்கலாம் என கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் (Kavya Maran) இந்த 4 வீரர்களை தக்கவைக்க நிச்சயம் திட்டமிடுவார்.
பாட் கம்மின்ஸ்: வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் பாட் கம்மின்ஸை (Pat Cummins) ஹைதராபாத் வெளியே விடாது. அவரின் பந்துவீச்சும் அவர்களுக்கு முக்கியம். எனவே, அடுத்த சீசனுக்கு (IPL 2025) இவரை தக்கவைப்பது உறுதி.
டிராவிஸ் ஹெட்: கடந்த முறை அதிரடி பேட்டிங்கால் அனைத்து அணிகளையும் அலறவிட்டவர் டிராவிஸ் ஹெட் (Travis Head). அமெரிக்காவின் MLC தொடரிலும் வெளுத்து வாங்கினார். எனவே, இம்முறை இவரையும் எஸ்ஆர்ஹெச் அணி தக்கவைக்கும்.
ஹென்ரிச் கிளாசன்: சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு இரண்டையும் அசராமல் சிக்ஸருக்கு பறக்கவிடும் திறன் கிளாசனை (Henrich Klassen) தவிர வேறு யாருக்கு இருக்கிறது...? டி20இல் தற்போதைக்கு சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர் இவர்தான். எனவே இவரையும் சன்ரைசர்ஸ் விடாது.
அபிஷேக் சர்மா: இவரும் ஹெட்டுடன் இணைந்து ஒரு மிரட்டலான சீசனை வழங்கினார். இந்திய இடது கை பேட்டர் அதுவும் ஓப்பனர் இவரை போல் கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த பல சீசன்களாகவே அபிஷேக் சர்மாவை (Abhishek Sharma) ஹைதராபாத் பாலுட்டி வளர்த்து வருகிறது என்பதால் இந்த சீசனிலும் அவரை அந்த அணி விடாது.
இந்த நான்கு வீரர்களை தக்கவைக்கும்பட்சத்தில் நடராஜன், நிதிஷ் ரெட்டி, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோரில் இரண்டு பேரை RTM மூலம் மெகா ஏலத்தில் மீண்டும் தக்கவைத்துக்கொள்ள சன்ரைசர்ஸ் அணி திட்டமிடும்.