பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைப்படங்கள் மூலம் மக்களை சென்றடைந்த தலைவர்களுள் விஜயகாந்த் முக்கியமானவர்.
அந்த வகையில், அவர் நடித்த மொத்தம் 154 படங்களில் அவரை அறியாத தலைமுறையினரும், அவரின் நடிப்புத் திறனையும் பார்க்க விரும்புவோரும் கண்டிப்பாக தவறவிடக் கூடாத 7 முக்கிய திரைப்படங்களை இங்கு காணலாம்.
சத்ரியன்: சத்ரியன் திரைப்படம் விஜயகாந்தின் திரைவாழ்வில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் எனலாம். காவல் துறை அதிகாரியாக விஜயகாந்தை நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இதில் பன்னீர் செல்வமாக மிரட்சி தரும் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தை நாயகன் திரைப்படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக செயல்பட்ட கே. சுபாஷ் இயக்கினார். குறிப்பாக, இத்திரைப்படத்தை தயாரித்தது மணிரத்னம் ஆவார்.
வானத்தைப் போல: 2000ஆம் ஆண்டில் விஜயகாந்த் டபுள் ஆக்ஷனில் அதுவும் குடும்பத்தை மையமிட்ட கதையம்சத்தில் நடித்து பெரும் வெற்றியை பெற்ற படம் தான் வானத்தை போல. பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா என பெரும் நட்சத்திர பட்டாளம் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஃபேமிலி சப்ஜக்ட் படங்களில் தனது தனி முத்திரையை பதித்த இயக்குநர் விக்ரமன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மாநில அரசின் இரண்டு விருதுகளை வென்றது. மேலும், பல மொழிகளிலும் டப் செய்து வெளியானது.
பூந்தோட்ட காவல்காரன்: விஜயகாந்தின் நடிப்புத்திறனை எடுத்துரைக்கும் மற்றொரு திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன். இத்திரைப்படம் 1988ஆம் ஆண்டில் வெளியானது. ராதிகா, ஆனந்த், விஜய் கிருஷ்ணராஜ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தை செந்தில்நாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கினார். அவர் எஸ்.ஏ. சந்திரசேகர், வி. அழக்கப்பன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்பிராகிம் ராவுத்தர் தயாரித்திருந்தார்.
வைதேகி காத்திருந்தாள்: ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மிகவும் அமைதியான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனைத்து பாடல்களும் இப்படத்தில் ஹிட் என்றாலும், விஜயகாந்த் திரையில் பாடும் 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' பாடல் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதாரவை பெற்றது. திரையரங்கில் இப்படம் 100 நாள்களை தாண்டி ஓடி, நல்ல ஹிட் கொடுத்தது.
ஏழை ஜாதி: பூந்தோட்ட காவல்காரன் படத்தின் திரைக்கதையை எழுதிய லியாகத் அலி கான் இயக்கி, விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஏழை ஜாதி. அரசியல் ரீதியிலான இத்திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸ் என்ற முன்னணி கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். விஜயகாந்த் நடித்த அரசியல் படங்களை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இத்திரைப்படத்தை தவறவிடக்கூடாது.
தமிழ்ச்செல்வன்: விஜயகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கி, 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தமிழ்ச்செல்வன். தேவா இசையமைத்த இப்படத்தில் ரோஜா, மணிவண்ணன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஐஏஎஸ் அதிகாரியாக விஜயகாந்த் இப்படத்தில் நடித்திருந்தார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். ஆனால், இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும், விமர்சன ரீதியில் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பிரபாகரன்: விஜயகாந்தின் 100ஆவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, எதிர்பார்ப்பை மிஞ்சி வேற லெவலில் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை ஆர்.கே. செல்வமணி இயக்கினார். இது அவரின் இரண்டாவது படமாகும். விஜயகாந்தின் புலன் விசாரணை படம்தான் இவரின் முதல் படமாகும். சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டிருந்த இத்திரைப்படத்தையும் இப்பிராகிம் ராவுத்தர் தயாரித்திருந்தார்.