8th Pay Commission Big Update: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது
8வது ஊதிய குழு அதன் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு, அதாவது 2026ம் ஆண்டு சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில் இன்றைய அறிவிப்பு மிகவும் நிம்மதியை அளித்துள்ளது எனலாம்.
8வது ஊதியக் குழு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச சம்பள உயர்வு 186 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்ப்பர்க்கிறார்கள். 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்கள் தற்போது மாதத்திற்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது 6வது ஊதியக் குழுவின் அடிப்படை சம்பளமான ரூ.7,000 என்ற தொகையிலிருந்து உயர்த்தப்பட்ட தொகையாகும்.
தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரக் குழுவின் (JCM) செயலாளர் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா 8வது ஊதிய குழு ஒப்புதல் குறித்து தெரிவிக்கையில், குறைந்தபட்சம் 2.86 ஃபிட்மென்ட்ஃபேக்டரை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். இது 7வது ஊதியக் குழுவின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்ட 2.57 ஃபிட்மென்ட் காரணியுடன் ஒப்பிடும்போது, இது 29 அடிப்படை புள்ளிகள் (bps) அதிகமாகும்.
மத்திய அரசு 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணியை அங்கீகரித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அல்லது ஓய்வூதியம் 186 சதவீதம் அதிகரித்து ரூ.51,480 ஆக உயரும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஊதியமான ரூ.18,000 உடன் ஒப்பிடும்போது மிக அதிக அளவாக இருக்கும்.
8வது ஊதிய குழு பரிந்துரைக்கும் ஃபிட்மென்ட் காரணி மேலும் அதிகரித்தால் சம்பளத்தில் அதற்கேற்ப உயர்வு ஏற்படும். ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பளம் இரண்டும் உயரும் என கூறப்படுகிறது.
8வது சம்பளக் குழுவின் கீழ், தற்போது எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் காரணி 2.86 நிறைவேறினால் ஓய்வூதியங்கள் தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.9,000 உடன் ஒப்பிடும்போது 186 சதவீதம் அதிகரித்து ரூ.25,740 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வுக்கு வழிவகுத்த 7வது சம்பள ஆணையம் 2014 பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் செயல்படுத்தப்பட்டன.
குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.7,000 இலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்துதல்; ஊதிய அமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துதல்; ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துதல்; மற்றும் 2026 ஜனவரி 1ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய முறையை திருத்துதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.