சமீப காலங்களில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஜித்தின் வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இதற்கிடையில் அஜித்தின் வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ல் வெளியான தனது "மெட்ரோ" படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வலிமை திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ஜூ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால், அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஹெச். வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க | வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அந்த பதில் மனுவில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவான வலிமை படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள், உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு என்றும், எனவே எந்த காப்புரிமையையும் மீறவில்லை என்றும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் மெட்ரோவை ஒப்பிட்டு கூறப்படவில்லை என்றும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை மூலதனத்தில் எடுக்கப்பட்ட வலிமை படத்தை, ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும், இந்நிலையில் தடை விதித்தால் பெருத்த பாதிப்பு ஏற்படும் என்பதால், மெட்ரோ படத் தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என இயக்குனர் வினோத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பதில் மனுவை ஏற்ற நீதிபதி, வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
மேலும் படிக்க | திரையரங்கில் தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்? உண்மை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR