கடந்த வாரம் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் நேற்று சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர், தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார். மேலும், மக்களிடம் புரட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வியாழக்கிழமை இரவு நடிகர் வடிவேலு வந்தார். அப்போது வழக்கம் போல் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும் செயல்களைச் செய்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அப்போது, உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்தேன், கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. ரஜினி அரசியலுக்கு வருவது எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது. மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்க வேண்டும். என்னுடைய திட்டப்படி வரும் 2021-ல் நான்தான் முதல்வராக வருவேன் என நகைச்சுவையாக வடிவேலு கூறினார்.