நடிகர் தீப்பெட்டி கணேசன் மற்றும் அவரது மனைவி பற்றி வதந்தி பரப்பியவர் மீது போலீஸில் புகார்.
ரேனிகுண்டா, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். இவரது மனைவி இவரை விட்டு ஓடி விட்டதாகவும், அதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சமுக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார் தீப்பெட்டி கணேசன்.
அதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் மதுரை. சென்னைக்கு வந்து போராடி நடிகனானேன். ரேனிகுண்டா படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது சினிமாவில் எனக்கென ஒரு இடம் உள்ளது. அதனால் அடுத்து இன்னும் பெரிய படங்களில் நடித்து பேசப்படும் நடிகராக வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறேன். சென்னையில் மனைவி இரண்டு மகன்களோடு சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த நேரத்தில், என் மனைவி ஓடிப்போய் விட்டதாகவும், அதனால் நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியிடுகிறார்கள். அதைப்பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால், எனக்கு வேண்டப் பட்டவர்கள் மற்றும் உறவினர்கள் ஆளாலுக்கு போன் போட்டு அதிர்ச்சியுடன் கேட்டபோதுதான், அந்த செய்தி எவ்வளவு பேரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். மனசு ரொம்பவே வலித்தது.
அதனால்தான் இந்த மாதிரி ஆட்களை விடக்கூடாது என்று போலீசில் புகார் செய்து, அந்த செய்தியை உடனடியாக டெலிட் பண்ண வைத்தேன். மேலும் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது. இப்படி அடுத்தவன் குடும்பத்தைப்பற்றி அவதூறு பரப்பிதான் சம்பாதிக்க வேண்டுமா? என்னைப் பற்றி எழுதியது போன்று இனிமேல் யாரைப்பற்றியும் இந்த மாதிரியான செய்திகளை வெளியிடக் கூடாது என்பதற்காகத்தான் உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.
என்னைப்போலவே மற்ற நடிகர்- நடிகைகளும் தங்களைப்பற்றி தவறான செய்தி பரப்புவோரை உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் வதந்தி பரப்புபவர்களுக்கு பயம் ஏற்படும் என தீப்பெட்டி கணேசன் கூறினார்.