பொழுது போகவில்லை என்று எடுக்கப்பட்டதா மாறன்? திரை விமர்சனம்!

தனுஷின் மாறன் திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 01:16 PM IST
பொழுது போகவில்லை என்று எடுக்கப்பட்டதா மாறன்? திரை விமர்சனம்! title=

ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே என தொடர்ச்சியாக இரண்டு படங்களுக்கு பிறகு தனுஷின் மாறன் படமும் மூன்றாவதாக தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.  மேலும் சுருதி வெங்கட், சமுத்திரகனி, மகேந்திரன், ராம்கி போன்றோர் நடித்துள்ளனர்.  துருவங்கள் பதினாறு, மாபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.  

மேலும் படிக்க | அஜித்துக்கு வலிமை சேர்த்திருக்கிறதா வலிமை? விமர்சனம்

நேர்மையான பத்திரிக்கையாளராக இருந்து குழந்தைகளின் இறப்பிற்கு காரணமானவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததால் தனுஷின் அப்பாவான ராம்கியை  கொன்று விடுகின்றனர்.  இரண்டாவது பிரசவத்தின்போது தனுஷின் அம்மாவும் இறந்து விடுகிறார்.  பின்பு தன் தங்கையை தானே வளர்க்கிறார் தனுஷ், இவர்களுக்கு உதவிகரமாக தனுஷின் மாமா ஆடுகளம் நரேன் இவர்களைப் பார்த்துக் கொள்கிறார்.  தன் அப்பாவைப் போலவே தனுசும் நேர்மையான பத்திரிகையாளராக இருக்கிறார். இதனால் தனுஷின் சொந்த வாழ்க்கையில் சில அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே மாறன் படத்தின் கதை. 

பத்திரிக்கையாளராக காட்டப்படும் தனுஷ் உண்மை செய்திகளை மக்களுக்கு கொடுத்து பேமஸ் ஆவது போல் காட்சிகள் இடம்பெறுகிறது. ஆனால் அதற்கான காட்சிகள் எதுவுமே சுவாரசியமாக காட்டப்படவில்லை.  ஒரே பாட்டிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தில் தனுஷின் முகம் இடம் பெறுவது போல் காட்டப்படுகிறது.   ஆனால் அடுத்த சீனிலேயே பாரில் உட்கார்ந்து தனுஷ் குடிப்பது போல் காட்டப்படுகிறது.  படத்தில் வரும் எந்த காட்சியிலும் சிறிதளவு லாஜிக்கை யோசித்து இருந்தாலும் இப்படி படுமோசமாக படம் உருவாகி இருக்காது.  

தனுசுக்கு ஜோடியாக வரும் மாளவிகாவும் சக பத்திரிகையாளராக காட்டப்படுகிறார், படம் முழுவதும் தனுஷ் கூடவே டிராவல் செய்கிறார்.  ஆனால் அந்த அலுவலகத்தில் அவர் என்ன வேலை செய்கிறார் என்று கடைசிவரை சொல்லப்படவில்லை.  அதேபோல் படம் முழுக்க வாயில் பப்பில்காமை மெல்வது மட்டுமே அவருக்கு வேலையாக கொடுக்கப்பட்டுள்ளது.  படம் முழுக்க வரும் காட்சிகள் அனைத்திலும் இதையே தான் செய்கிறார்.   இரண்டு காட்சியில் மட்டுமே வரும் மாஸ்டர் மகேந்திரன் எதற்கு இந்த கதையை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.  சமுதிரக்கனி, நரேன் போன்ற முன்னணி நடிகர்களும் வீணடிக்கபட்டுள்ளனர். 

தனுஷூம் வேண்டாவெறுப்பாக இப்படத்தில் நடித்தது போல் தெரிகிறது.  டப்பிங்கிலும் அவர் குரல் சரியாக இல்லை.  கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அதர பழசான ஒரு கதையை எழுதி இயக்கி உள்ளார் கார்த்திக் நரேன்.  இவருடைய முந்தைய படமான மாபியா படத்துக்கு இதே விமர்சனம் தான் வந்தது.  படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் முன்கூட்டியே கணிக்கும் அளவிற்கு தான் திரைக்கதை உள்ளது. அதுவும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என்று காட்டப்படும் காட்சிகள்லாம்... ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

அசுரன் போன்ற ஒரு தரமான மியூசிக் போட்ட ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.  படத்தை போலவே பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் மோசமாக இருந்தது. இதையெல்லாம் தெரிந்து தான் தயாரிப்பாளர் நேரடியாக இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தாரோ என்னமோ.  கவன்,  கோ போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வந்த படங்களின் வரிசையில் ஒரு சதவிகிதம் கூட இப்படம் செய்யவில்லை.  முதல் படம் வெற்றியடைந்து விட்டது என்று மமதையில் திரிந்த கார்த்திக் நரேன்க்கு மீண்டும் ஒரு அடி.  வெற்றிமாறன் சொன்னது போல, இன்னும் அவர் நிறைய சினிமாவை கற்றுக்கொண்டு மட்டுமே திரை படங்களை இயக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

மேலும் படிக்க | எப்படி உள்ளது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்? திரை விமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News