நடிகர் சிம்பு விரைவில் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைக்கு இதுபோன்ற முடிவு ஏதும் எடுக்கவில்லை என சிம்பு தெரிவித்துள்ளார்!
தமிழ் திரையுலக காதல் மன்னன் சிம்பு விரைவில் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தது. இதனை செய்திகளை மறுத்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "திருமணம் குறித்த சில வதந்திகள் என் காதுகளுக்கு வருகிறது. நான் தெளிவுபட கூற விரும்புகிறேன், அந்தமாதிரி திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை, இது குறித்து ஏதேனும் முடிவோ, சம்மதமோ இருந்தால் அதனை நான் குறித்த நேரத்தில் குறித்த வழிமுறையில் தெரிவிப்பேன்.
தொழில் ரீதியாகவும் சில படங்களுடன் என்னைத் தொடர்பு படுத்தி நிறைய வதந்திகள் வருவதை அறிகிறேன். ஒரு நடிகராக சிலபல வலியுறுத்தும் சூழ்நிலைகளின் அழுத்தத்தில் சில தயாரிப்பாளர்களை நான் கேஷுவலாகச் சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. அதனால் நான் பட வாய்ப்புக்காக பார்த்தேன் என்று பொருளல்ல. இந்தச் சந்திப்புகளையெல்லாம் எதிர்காலப் படங்கள் என்று வதந்திகள் பெரிய அளவில் புழங்கி ஏதோ அறிவிக்கப்பட்ட படங்களாகவே செய்திகள் வெளிவருகின்றன.
இது போன்று கேள்விப்பட்டதையெல்லாம் செய்தியாக நம்புவது தொழிற்துறையையும் என் ரசிகர்களையும் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வதந்திகளை உண்மையென நம்பி அது நடக்காது போகும் போது ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகின்றனர். ஆகவே அப்படி படங்கள் ஏதாவது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்றால் அதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும் என்பதை ஒருநடிகராக இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.