காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைகாதத்திற்கு திமுக தான் காரணம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் MK ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது...
"துரோகத்துக்குத் துணைபோன அதிமுகவின் உண்மை முகம், அவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டுள்ளது.
மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கண்டித்துப் பேசத் துணிவில்லாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் குறிவைத்து விமர்சித்து திசைதிருப்பும் கீழ்த்தரமான அரசியல் செய்திருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள அதிமுக, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கிற பெரும்பான்மையைத் தமிழ்நாட்டின் நலனுக்குப் பயன்படுத்தாமல் பாஜகவின் துரோகத்துக்குத் துணை நின்று வருகிறது. மக்களவையை முடக்கி, நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும் பாஜகவின் தந்திரமான ஏவலாட்களாக செயல்பட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது அதிமுக.
தங்கள் துரோகத்தையும் இயலாமையையும் மறைப்பதற்காக உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பாஜகவின் துரோகத்தைக் கண்டித்து மென்மையாகக் கூட எதையும் பேசும் திராணியில்லாத அதிமுகவினர், கன்னியாகுமரி முதல் சென்னை வரை திமுகழகத்தை விமர்சித்து தங்கள் உண்மை முகத்தை காண்பித்துள்ளனர். நாங்களும் போராடினோம் என்று மக்களை ஏமாற்ற அதிமுக போட்ட நாடகம், அவர்களது எஜமானர்களைக் கண்டிக்க முடியாத அவதி ஆகியவற்றால், மக்கள் மன்றத்தில் அவர்களுடைய முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்." என தெரிவித்துள்ளார்!