தமிழர்கள் மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக, அமாவாசை தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள ஆறுகள், அருவிகள், கடல்களில் புனித நீராடுவது வழக்கம். இதில் ஆடி, புரட்டாசி, தை மற்றும் மாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் முக்கியமானவையாகும்.
இவற்றில் தை அமாவாசை இன்னும் சிறப்பான நாளாக கடைபிடிக்கப்படும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தை அம்மாவசை உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலத்திலிருந்து வானுலகத்தில் உள்ளோர்களுக்கு பகல் பொழுது ஆரம்பம் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீராமர் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தவாரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பக்தர்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் அக்னி தீர்த்தக் கடலிலும், அதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், பேருந்து, கார், வேன்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்தனர். இவர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடற்கரை மற்றும் கோயில் வாயிலிலும் நகரின் முக்கியப் பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, நகரப் பேருந்துகள் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே நிறுத்தப்பட்டன. கார், வேன் போன்ற சுற்றுலா வாகனங்களும் மாற்றுப் பகுதிகளில் திருப்பிவிடப்பட்டன.