உங்கள் Ex-ஐ பற்றி நினைக்காமல் இருப்பது எப்படி..? காதல் முறிவில் இருந்து மீள டிப்ஸ்..!

சிலர், அவர்களின் முன்னாள் காதலை மறக்க முடியாமலும் பலர் தவிப்பதுண்டு. இதிலிருந்து மீள என்ன வழி? 

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2023, 06:56 PM IST
  • எக்ஸ் பத்தி நினைவாக இருக்கா?
  • காதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?
  • காதல் முறிவில் இருந்து மீள வழிகள் இதோ!
உங்கள் Ex-ஐ பற்றி நினைக்காமல் இருப்பது எப்படி..? காதல் முறிவில் இருந்து மீள டிப்ஸ்..!  title=

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான அடிப்படை தேவைகள், விருப்பங்கள் என பல இருக்கின்றன. இதில், தேவைகள் எதுவாக இருப்பினும் விருப்பங்கள் மட்டும் பல வகைகளில் மாறுபடும். அப்படி மாறுபடும் விருப்பங்களுள் ஒன்று, காதல். எழுதத்தெறியாதவர்களையும் கவியரசர்களாக மாற்றும் திறன், காதலுக்கு உண்டு. ஆனால், அப்படிப்பட்ட காதலுக்கும் ஒரு கட்டத்தில் முடிவு வரும். பலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் அதை ஏற்றுக்கொண்டாலும், தங்களது முன்னாள் காதலர் அல்லது காதலியை மறக்க முடியாமல் தவிப்பர். அப்படி Ex-ன் நினைவுகளில் இருந்து மீள முயற்சிப்பவர்களுக்கான பதிவு இது. 

1.முன்னாள் காதலர்/காதலியின் உடைமைகள்:

காதலில் இருக்கும் போது நாம் அன்புக்குரியவருக்காக பல பரிசுகளை வாங்கி கொடுத்திருப்போம். அவர்களும் நமக்காக பல பொருட்களை வாங்கி கொடுத்திருப்பர். சில சமயங்களில், நீங்கள் ஒன்றாக இருந்த தருணங்களில் சில பொருட்கள் கைமாறப்பட்டிருக்கும். ஆனால், காதல் முறிவு ஏற்பட்டவுடன் இந்த பொருட்களை உங்கள் கண் முன் வைத்திருப்பது நல்லதல்ல. அதனால், அப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு பெட்டியில் மூட்டைக்கட்டி வையுங்கள். இவற்றை தூக்கிப்போட மனம் வரவில்லை என்றால் அனைத்தையும் உங்கள் கண் படாத இடத்தில் வைத்து விடுங்கள். உங்கள் Ex-ஐ சமூக வலைதள பக்கங்களில் நண்பர்களாக வைத்திருந்தால், அவர்களை நீக்கிவிடலாம். 

2.எழுதுங்கள்..

எந்த ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும் அதை ஒரு பேப்பர் பேனா எடுத்து எழுதினாலே பாதி தீர்வு கிடைத்து விடும் என்று கூறுவார்கள். இதைத்தான் நீங்களும் காதல் முறிவில் இருந்து மீளவும், உங்கள் Ex-ஐ பற்றி நினைக்காமல் இருக்கவும் செய்ய வேண்டும். அவர்களை பற்றி எப்போதெல்லாம் நினைக்கிறீர்களோ, அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அனைத்தையும் எழுதுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் பிற்காலத்தில் எடுத்து படித்து பார்க்கையில் உங்களுக்கே சிரிப்பு வரலாம். 

மேலும் படிக்க | கணவனிடம் இந்த மூன்று விஷயங்களை செய்யாதீர்கள்... மனைவிகளுக்கு சில டிப்ஸ்!

3.மனம் விட்டு பேசுங்கள்..

பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கென்று நெருங்கிய நண்பர்கள் கூட்டம் என்று ஒன்று இருக்கும். உங்கள் பழைய காதலை பற்றிய நினைப்பு வரும் போதெல்லாம் உங்கள் நண்பர்கள்/நண்பரிடம் அதை பற்றி பேசுங்கள். நல்ல நண்பர்கள் நீங்கள் புலம்பும் போது கண்டிப்பாக தோள் கொடுப்பர். அவர்களை சந்திக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் வெளியில் செல்லுங்கள். கண்டிப்பாக மனம் ஆறுதலடையும். 

4.உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்..

“வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரே..” என்ற பாடல் வரியை கேட்டிருப்பீர்கள். இதுதான் வாழ்வியல் நிதர்சனம். கண்டிப்பாக அனைவருக்கும் வாழ்வில் துணை தேவை. ஆனால், எல்லா நேரங்களிலும் நம்முடன் ஒருவர் வருவார் என கூற இயலாது. எனவே உங்களது உடல் நலன் மற்றும் மன நலனை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். ஹெல்தியான உணவுகளை சாப்பிடுங்கள், உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடித்த ஹாபிக்களை செய்யுங்கள். உங்களை நீங்கள் பார்த்துக்கொண்டாலே நீங்கள் வாழ்வில் பாதி வெற்றியை பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். 

5.கவுன்சிலிங்..

கவுன்சிலிங் அல்லது தெரபிக்கு செல்வது, உண்மையிலேயே நம் உடைந்து போன மனதை ஒட்டவைக்க உதவும். இது மட்டுமன்றி, நம் மனதில் ஏற்கனவே ஏற்பட்ட வலிகளும் நீங்கும். வாழ்க்கையை நேர்மறையான எண்ணத்துடன் எதிர்கொள்ள, இது உதவும்.

கடைசியாக ஒன்று..
“வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது..” என்ற பாடல் வரிகள் மிகவும் பிரபலம். இந்த வலி, உடல் வலியைக்காட்டிலும் மிகவும் கொடிய மன வலி என்று பலர் கூற கேட்டிருப்போம். எண்ணிலடங்கா இன்பத்தையும், தாள முடியா துன்பத்தையும் காதலால் மட்டுமே தர முடியும். நாம் ஒருவரை காதலிக்க ஆரம்பித்து விட்டால் நாம் அவருக்காக செய்யாத செயல்கள் இல்லை. அதுவே அந்த காதல் முடியும் தருவாயில், அந்த இன்னொருவர் நம்முடன் இருக்கப்போவதில்லை என்ற வலியை யாராலுமே தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதலே அன்றி, காதலே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்பதை மனதில் வைத்துக்காெள்ள வேண்டும். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறுவது போல, “Life has to go on”, இல்லையா..?

மேலும் படிக்க | அன்புக்குரியவருடன் சண்டையா..? சமாதானம் செய்ய ‘இந்த’ 5 வழிகளை பின்பற்றுங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News