கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்து, அர்ச்சகரின் ஆரத்தி தட்டில் காணிக்கை செலுத்துவது அல்லது கோயில் உண்டியலில் காசு போடுவது இதில் எதை கடைபிடிக்க வேண்டும்?..
இரண்டையுமே கடைபிடிக்கலாமே! இதில் ஏதாவது ஒன்றைத்தான் செய்ய வேண்டும் என்று விதி ஏதும் இருக்கிறதா என்ன? உண்டியலில் காசு போடுவது, ஆலயத் திருப்பணிக்கு உதவும். தட்டில் காசு போடுவது அர்ச்சகரின் பசியைப் போக்கும். தற்காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் அர்ச்சகரின் தட்டில் விழும் பணத்தில் பங்கு கேட்கும் ஆலய நிர்வாகங்களும் உண்டு. வருமானம் அதிகமாக வரும் மிகப் பெரிய திருத்தலங்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு சம்பளமும், இதர சௌகரியங்களும் நிறைவாகக் கிடைக்கும். சாதாரண நிலையில் உள்ள ஆலயங்களில் அர்ச்சகரின் வருமானம் குறைவாக இருக்கும்.
ஒருசில ஆலயங்களில் ஒருகால பூஜைக்குக்கூட வருமானம் இருக்காது. வறுமை நிலையிலும் ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதையே தங்கள் லட்சியமாகக் கொண்டு வாழும் அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதனைச் செய்யுங்கள். அடியவர்களுக்குச் செய்யும் தொண்டு, ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டிற்குச் சமமானது. அர்ச்சகரின் ஆரத்தித் தட்டில் காசு போட்டாலும், ஆலய உண்டியலில் காணிக்கை செலுத்தினாலும், அல்லது இரண்டையுமே செய்தாலும் புண்ணியம்தான். இதில் எது சரி என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.