1949-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் நாடு நிறுவப்பட்டதிலிருந்து சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
நாட்டில் மக்கள்தொகை பிரச்சனையினை தவிர்ப்பதற்காக, அரசாங்கம் தனது ’ஒரு குழந்தை’ கொள்கையினை 2016-ஆம் ஆண்டில் தளர்த்தியது, மேலும் தம்பதியர் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. என்றபோதிலும் இந்த மாற்றத்தால் பெருமளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. மாறாக இதுவரை இல்லா அளவிற்கு நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கை ஒன்றில்., 2019-ஆம் ஆண்டில், பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 10.48-ஆக இருந்தது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவர பணியகத்தின் (NBS) தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையின் படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த அறிக்கை தெரிவிக்கையில்., 2019-ஆம் ஆண்டில் 14.65 மில்லியன் குழந்தைகள் பிறந்தன, 2018-ல் 15.23 மில்லியன் குழந்தைகளும், 2017-ல் 17.23 மில்லியன் குழந்தைகளும் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 1.4 பில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 4.67 மில்லியனாக அதிகரித்துள்ளது.
சீனாவின் தொழிலாளர்கள் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து சுருங்கி வந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிக்கையின் படி நாட்டில் 16 முதல் 59 வயதுக்குட்பட்ட (உழைக்கும் வயது மக்கள் தொகை) மக்கள் 896.4 மில்லியன் மட்டுமே இருப்பதாக NPS தெரிவித்துள்ளது. முன்னதாக 2018-ல் இந்த எண்ணிக்கை 897.3 மில்லியனில் இருந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த மாற்றம் ஆனது தொடர்ச்சியான எட்டாவது ஆண்டு வீழ்ச்சியைக் குறிக்கிறது, மேலும் 2050-ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 23 சதவிகிதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப அளவுகளில் வரம்பு நீக்கப்படலாம் என்று சீன அரசாங்கம் அறிவித்திருக்ககும் போதிலும், உயரும் வாழ்க்கைச் செலவு, குழந்தை பராமரிப்பு செலவு போன்றவை குழந்தை பெற்றெடுப்பதற்கான ஊக்கங்களை கட்டுப்படுத்துவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
நாட்டில் உழைக்கும் மக்கள் சதவிகிதம் குறைந்துள்ள நிலையிலும் சீனாவின் பொருளாதாரம் 2019-ஆம் ஆண்டில் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.