கர்நாடகாவில் நேற்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற இறுதிக்கட்ட தீர்பினையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில், 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன.
தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறார்.
சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இன்னும் 7 பேரின் ஆதரவுதான் அந்த கட்சிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆதரவை எளிதில் திரட்டிவிட முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.
இதற்காக காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாஜக இழுப்பதை தடுக்க அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு பெங்களூரு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அங்கிருந்து உம்னாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகர் பட்டீல் ரகசியமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடியூரப்பா முதல்வராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து, அந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் விலை போகாமல் இருக்க, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ.க்கள், பேருந்து மூலம் கொச்சி மற்றும் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.