கார்ல் மார்க்ஸ், 1818-ம் ஆண்டு, மே 5-ம் தேதி ஜெர்மனியில் உள்ள ட்ரையர் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார்.
வழக்கறிஞரான கார்ல் மார்க்ஸின் தந்தை ஹென்றிச்சின் அறிவுரையால், ஆரம்பத்தில் சட்டம் பயின்ற கார்ல், பெர்லின் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படித்து, 1841ல் தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தனது கொள்கைகளின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜெனியை, 8 ஆண்டுகள் காதலித்து, கரம் பற்றிக் கொண்டார் கார்ல் மார்க்ஸ். பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஜெனி, கடுமையான குடும்ப எதிர்ப்பையும் மீறி, கார்ல் மார்க்ஸைத் திருமணம் செய்துகொண்டார். அந்த அன்பின் நீட்சியாக கார்ல் மார்க்ஸ் - ஜெனி தம்பதியினருக்கு 7 குழந்தைகள் பிறந்தன.
ஒட்டிப்பிறந்தது வறுமையும் புலமையும் என்பார்கள். ஆரம்பத்தில் சில காலம் இதழியல் துறையில் இருந்த மார்க்ஸ், சரியான பணியில் இல்லாமல் வறுமையில் தவித்தார். திடீரென ஒருநாள் தனது குழந்தைகளில் ஒன்று இறந்தபோது, செய்வதறியாது தவித்த மார்க்ஸ், தான் அணிந்திருந்த கோட்டை விற்று, தனது அன்பிற்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார் என்பது கொடுமையான வரலாற்று அவலம்.
தனது வாழ்வில் வறுமை துரத்திய வேகமே, தொழிலாளர்களைப் பார்த்து கார்ல் மார்க்ஸை இவ்வாறு சொல்லத்தோன்றியது. அதுதான், உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற புகழ்பெற்ற முழக்கமாக உருவெடுத்தது.
இதழியல் துறையில் அவ்வப்போது சில பணிகளை மார்க்ஸ் செய்தாலும், அவரது தத்துவ ரீதியான புத்தகங்களை எழுதும் பணிகளுக்கு உதவியாக இருந்து, பொருளுதவி செய்தவர் ”பிரெட்ரிக் ஏங்கல்ஸ்” எனும் அவரது பால்ய கால நண்பர்.
1845-ல் முதலாவது பொதுவுடைமைக் கழகத்தைத் தோற்றுவித்தார், கார்ல் மார்க்ஸ். அதன்பின், அவருடைய சிந்தனைகள் எண்ணம், செயல், எழுத்து எல்லாவற்றிலும் தொழிலாளர்களின் நலம் மட்டுமே மிகுதியாக இருந்தது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற தனிக்குழுக்கள் அமைத்தார், மார்க்ஸ்.
இந்த முதலாளித்துவ எதிர்போக்கினாலேயே பிரான்ஸ், பெல்ஜியம், பிரசல்ஸ் ஆகிய நாடுகளில் வெளியேற்றப்பட்டு கார்ல் மார்க்ஸ் இறுதியாக, லண்டனில் குடியேறினார். அங்கு தான் அவர் உலகப் புகழ்பெற்ற ’மூலதனம்’ எனும் நூலை எழுதினார். இந்நூலின் முதல் தொகுதி 1867-ம் ஆண்டில் வெளியானது. பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய மூன்றின் கலவையாக கார்ல் மார்க்ஸ் உருவாக்கிய மார்க்சிய சித்தாந்தங்களுக்கு உலகம் முழுவதும், தற்போதுவரை சுமார் 130 கோடி பேருக்கும் மேலானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.