விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லாவின் 55 வது பிறந்த நாள் இன்று.
>விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா.
>கல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.
>பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு, விமான ஓவியங்கள் தீட்டி அழகுபார்ப்பது. விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து அந்த அலுமினியப் பறவை புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.
>தாகூர் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்ற இவர், எதிர்காலத்தில் விண்வெளி பொறியாளராக ஆக வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஆராய்ச்சியாளர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படித்தார்.
>1982-ல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விமானப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், 1984-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
>பின்னர், 1986-ல் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் பெற்றார். அங்கேய தொடர்ந்து பயின்று நான்கு ஆண்டுகள் கழித்து விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
>அதன் பின்னர், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் சேர்ந்தார். அங்கு கம்ப்யுடேஷனல் ஃப்ளுயட் டைனமிக்ஸ் மற்றும் வெர்டிகல் மற்றும் ஷார்ட் டேக் ஆஃப் அன்ட் லாண்டிக் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
>1993ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சிப் பட்டியலில் இடம்பிடித்தார்.
>1995ம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன.
>கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 பயணம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் இவரையும் சேர்த்து ஆறு வீரர்கள் கொண்ட குழு ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. விண்வெளியில் 16 நாட்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது இந்த விண்கலம். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
>2003-ம் ஆண்டு விண்வெளியில் பறக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 ல்கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு விண்ணில் பாய்ந்தது. பிப்ரவரி 1-ம் தேதி, 16 நாட்கள் பயணம் முடித்து தரையிறங்கு வதற்குச் சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.