புதுடில்லி: அக்டோபர் 29 முதல் டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கு(டி.டி.சி) சொந்தமான அரசு பேருந்து மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேசிய தலைநகரில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் தெரிவித்தார்.
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்கள். சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமான டெல்லியில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றினார்.
அப்பொழுது அவர் சில முக்கிய அறிவிப்புக்களை அறிவித்தார். அது, "ரக்ஷா பந்தன்" நாளான இன்று, அக்டோபர் 29 முதல் அனைத்து டி.டி.சி (டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்) மற்றும் கிளஸ்டர் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு மூலம் எங்கள் சகோதரிகளுக்கு பரிசு வழங்க விரும்புகிறேன். இது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பெண்கள் பாதுகாப்பு விசியத்தில் ஆம் ஆத்மி கட்சி எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்க்கு வலுசேர்க்கும் வகையில் இரண்டு இரு முக்கிய முடிவுகளை டெல்லி அரசு எடுத்துள்ளது. ஒன்று டெல்லி மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது. மற்றொன்று மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகை என ஆம் ஆத்மி கூறியிருந்தது.
டெல்லி மெட்ரோ மற்றும் டி.டி.சி மற்றும் கிளஸ்டர் பஸ் சேவைகளில் பெண்களுக்கு இலவச சவாரி வழங்குவதற்கான திட்டங்களை முதல்வர் வெளிப்படுத்திய இரண்டு மாதங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.