நாடு முழுவதும் போராட்டம்
இந்திய பாதுகாப்புத்துறையின் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை, ஆகிய துறைகளில் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாக அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்கான நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படும் இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் என்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்து நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக உத்திரபிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைத்து போராட்டம் கலவரமாகவும் வெடித்தது.
மத்திய அரசு நடவடிக்கை
இதனை தொடர்ந்து போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெரும் கண்துடைப்பு நாடகமே எனக்கூறி இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் இதுவரை உறுதியான நிலைபாடோடு இருந்து வருகின்றனர்.
விமானதளபதி விளக்கம்
இதற்கு இடையே, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்தில் பேசியுள்ள ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, "அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் ராணுவத்தில் சேர முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், ராணுவத்தில் இணைவதற்கு ஒழுக்கம் மிக அவசியம் என அறிவுறுத்தியுள்ள அவர், ரயில் எரிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருபவர்கள், தாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என கட்டாயம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் எனவும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் எதிர்ப்பு
இவரின் இந்த கருத்திற்கும், அக்னிபாத் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மக்கள் தங்களுக்கு எதிரான திட்டங்களுக்கு அமைதியான முறையில் குரல் கொடுத்து அரசு கேட்கவில்லை என்றால், தங்கள் உரிமைக்காக போராட்டத்தில்தானே இறங்குவார்கள் என அரசியல் கட்சியினர் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் செயலாக அக்னிபாத் திட்டம் அமைந்துள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி சர்ச்சை பேச்சு
இதற்கு இடையே இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலர் விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, அக்னிபாத் வீரர்களுக்கு எலக்ட்ரிஷியன், டிரைவர், முடி திருத்துதல் உள்ளிட்ட வேலைகளுக்கான திறன் பயிற்சி அக்னிபாத் திட்டத்தின் கீழ் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். அது மட்டுமின்றி, 4 ஆண்டு சேவையை முடித்த பிறகு இந்த திறன் பயிற்சிகள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் கூறியுள்ளார்.
பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சை கருத்து
அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி வெளியேறும் வீரர்களை, பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி பணிக்கு ஆள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்வோம் எனக்கூறியுள்ளார். மத்திய அமைச்சர் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஆகியோரின் இந்த பேச்சு நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் படிக்க | திருமணமான 5 நாட்களில்... கறிவிருந்து வைத்து மருமகனை வெட்டி கொன்ற மாமனார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR