இந்தியா - பிரான்ஸ் இடையே ரபேல் போர் விமான உடன்படிக்கை கையொப்பம் ஆன போது தான் பதவிக்கு வரவில்லை என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்!
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் வகைப் போர் விமானங்களை வாங்குவதற்கு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டசால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டாக இணைந்து ரிலையன்ஸ் டசால்ட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுநிறுவனத்தைத் தொடங்கினால்தான் ரபேல் போர்விமானம் வாங்கும் உடன்பாட்டைச் செய்துகொள்ள முடியும் என்று இந்தியா தெரிவித்ததாக முன்னாள் பிரெஞ்ச் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்ததாக அந்நாட்டின் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. இது ரபேல் உடன்படிக்கையை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ரபேல் உடன்படிக்கை இரு அரசுகளுக்கு இடையே நடந்த பேச்சின் மூலம் செய்துகொள்ளப்பட்டதாகவும், அந்த உடன்படிக்கையின்போது தான் பதவிக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.