ஈழத்தமிழர்களுக்கு இல்லாத இரங்கல் எனக்கு வேண்டாம் -மைத்ரேயன் உருக்கம்

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் பலியான போது நாடாளுமன்றத்தில் தெரிவிக்காத இரங்கல், நான் உயிரிழந்தால் செய்ய வேண்டாம் என மைத்ரேயன் கேட்டுக் கொண்டார்!

Last Updated : Jul 24, 2019, 03:48 PM IST
ஈழத்தமிழர்களுக்கு இல்லாத இரங்கல் எனக்கு வேண்டாம் -மைத்ரேயன் உருக்கம் title=

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் பலியான போது நாடாளுமன்றத்தில் தெரிவிக்காத இரங்கல், நான் உயிரிழந்தால் செய்ய வேண்டாம் என மைத்ரேயன் கேட்டுக் கொண்டார்!

மாநிலங்களவையில் தனது கடைசிநாளான இன்று அவர் ஆற்றிய உரையின் போது அவர் தெரிவிக்கையில்., "முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்பட்டேன். மாநிலங்களவையில் பதினான்கரை ஆண்டு கால நீண்ட சேவைக்குப் பிறகு நான் ஓய்வு பெறுகிறேன். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை இது எனது அஸ்தமன நேரம். 

உண்மையில், மாநிலங்களவைக்கு அதிமுக சார்பாக மூன்று பதவிக்காலங்களுக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு உறுப்பினர் என்ற தனிச் சிறப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு அளித்துள்ளார். அவர் மீது என்றைக்கும் மாறாத எனது விசுவாசம் தொடர்ந்துகொண்டே இருக்கும். 

இந்த அவையில் எப்போதும் என்னை சகோதரராகக் கருதி வழிநடத்திய ஒருவருக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கவேண்டும், அவர் தான் அருண் ஜேட்லி. அவர் விரைவாக உடல் நலம் தேறி என்னைப்போல் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் வழிநடத்தவேண்டும்.

என் நீண்டகால நண்பரும், இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடியை நான் மறக்க இயலாது. 1990-களில் இருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. பல ஆண்டுகளாக அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே விசுவாசமான தூதராகச் செயல்பட்டு வந்திருக்கிறேன். 

கடந்த பதினான்கரை ஆண்டுகளில் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழக மீனவர்களின் நலனுக்காக, ஈழத்தமிழர்களின் நிலை ஆகியவை குறித்து திரும்பத் திரும்ப இத்தனை ஆண்டுகளில் இந்த அவையில் நான் உணர்வுப்பூர்வமாக குரல் கொடுத்துப் போராடியுள்ளேன்.

ஒரேயொரு விஷயம் மட்டும் எப்போதும் என் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது. இந்த அவை பல நேரங்களில் பலருக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்துள்ளது. இறந்து போன மக்களுக்கு இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் மவுன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். 

ஆனால் 2009-ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள், எனது தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்த அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இது எனது நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக தைத்துக்கொண்டே இருக்கும். எனது தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக் கூட இந்த அவை காட்டவில்லை. 

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் பலியான போது நாடாளுமன்றத்தில் தெரிவிக்காத இரங்கல், எனது வாழ்வின் முடிவு ஏற்பட்டாலும் கூட எந்தவித இரங்கல் தீர்மானமோ மவுன அஞ்சலியோ இந்த அவையில் எனக்கு வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என உருக்கமாக தெரிவித்தார்.

Trending News