பா.ஜ.க.நடத்தும் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலை, சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என பாஜக மகளிரணி தலைவி சர்ச்சை பேச்சு...
மேற்குவங்கத்தில் பா.ஜ.க.நடத்தும் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலை, சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவி லாக்கெட் சாட்டர்ஜி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் டிசம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மூன்று ரத யாத்திரையை நடத்தத் திட்டம் போட்டுள்ளது. 42 லோக்சபா தொகுதிகளுக்கும் இந்த ரத யாத்திரை செல்லும். இதற்கான பயணத்தை பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. ரத யாத்திரை பயணத்தை முடிக்கும் போது, மாபெரும் பேரணி நடத்தவும் அதில் பிரதமர் மோடியை பேச வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில பா.ஜ.க. மகளிரணி தலைவி லாக்கெட் சாட்டர்ஜி (locket chatterjee), ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்த யாத்திரைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். எவராலும் இதை தடுக்க முடியாது என்று கூறிய லாக்கெட் சாட்டர்ஜி , தடுக்க முயற்சிப்பவர்களின் தலை ரதத்தின் சக்கரங்களால் நசுக்கப்படும் என்றும் பேசியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
We will hold Rath Yatras to save democracy in West Bengal. Nobody can stop it and if anyone tries to stop it then they will be crushed under the wheels of the chariot: Locket Chatterjee, BJP State Mahila Morcha President pic.twitter.com/Jjr9BvWimb
— ANI (@ANI) November 11, 2018
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி, ‘சமூகங்களைப் பிரித்து ஆதாயம் தேடுவது தான் பாஜக-வின் நோக்கம். ஆனால், மேற்கு வங்க மக்கள் பாஜக குறித்து நன்கு புரிந்தவர்கள். அவர்கள் பிரித்தாலும் அரசியலுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்' என்று தெரிவித்துள்ளார்.