ஆளுநரின் 2வது காதல் கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது: HD குமாரசாமி கவலை

ஆளுநர் அனுப்பிய காதல் கடிதத்திலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என சபாநாயகரிடம் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2019, 05:32 PM IST
ஆளுநரின் 2வது காதல் கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது: HD குமாரசாமி கவலை title=

பெங்களூரு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, பரபரப்பான சூழ்நிலையில் நேற்று கர்நாடக சட்டசபை காலை 11.30 மணிக்கு கூடியது. அப்பொழுது பாஜக எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோசம் எழுப்பினார்கள். 

அப்போது பேரவையில் பேசிய சித்தராமையா, குழப்பமான சூழல் நிலவுவதால் ஒரே நாளில் முடிவெடுப்பது சரியாக இருக்காது என்று கூறினார். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பின்னர் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடாகவில் நிலவும் குழப்பமான சூழலுக்கு யார் காரணம் என்பது அனைவருக்கு தெரியும் என்று பேசினார். இதனால் சட்டசபையில் கடும் அமளி செய்தனர் பாஜகவினர். 

குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், கால தாமதம் செய்கிறது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பாஜகவினர். அமளிக் காரணமாக சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். 

பாஜக தூதுக்குழு நேற்று மாலை ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து, கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் கடிதம் அனுப்பினார். ஆனால் இன்றும் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வில்லை. 

இதனையடுத்து மீண்டும் பாஜகவினர் ஆளுநரிடம் முறையிட்டனர். அதன் பின்னர் ஆளுநர் தரப்பில் இருந்து, இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பட்டது. 

இந்தநிலையில், ஆளுநரின் கடிதம் குறித்து பேசிய கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியது, ஆளுநர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் ஆளுநரின் இரண்டாவது காதல் கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது எனக் கூறினார். மேலும் அவர் 10  நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குதிரை பேரம் பற்றி தெரிந்து கொண்டார்? எனக் கேள்வி எழுப்பியதோடு, பாஜக ஈடுபட்ட குதிரை பேரத்துக்கான ஆதாரத்தை காட்டினார். 

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை உங்களிடம் (சபாநாயகர்) விட்டு விடுகிறேன். இதை டெல்லி இயக்காது. ஆளுநர் அனுப்பிய கடிதத்திலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கூறினார்.

Trending News