புதிய மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!!

நாடு முழுவதும் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Last Updated : Jan 2, 2018, 06:00 PM IST
புதிய மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!! title=

மருத்துவ கல்வியை நிர்வகிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. புதிய மசோதாவின்படி கவுன்சிலின் நிர்வாகத்தில் அரசு நியமிக்கும் நபர்கள் இருப்பார்கள். இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மருத்துவ ஆணையம் அமைக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை தவிர டி.பி. நோயாளிகளுக்கு இன்று சிகிச்சை அளிக்கப்பட வில்லை. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டன. 

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.  தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்களும், 60 ஆயிரம் டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

சென்னையில் பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவமனைகளில் கூட இன்று புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் அந்த பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நீரிழிவு, சிறுநீரகம், ரத்த கொதிப்பு, இருதயம், நரம்பியல் உள்ளிட்ட துறை சார்ந்தவர்களும், காய்ச்சல், தலைவலி, கைகால் வலிக்கு சிகிச்சை பெற வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். 

அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் 2.9 லட்சம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மக்களவையில் தெரிவித்தார். இதனையடுத்து, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Trending News