Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம் - தலைவர்கள் இரங்கல்

Sitaram Yechury Passed Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 12, 2024, 05:42 PM IST
  • அவருக்கு வயது 72.
  • கடந்த ஆக. 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • இவர் 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம் - தலைவர்கள் இரங்கல் title=

Sitaram Yechury Passed Away: கடந்த சில நாள்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி இன்று (செப். 12) உயிரிழந்தார். இவருக்கு வயது 72. 

கடந்த ஆக. 19ஆம் தேதி அன்றி டெல்லி எய்ம்எஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். அவர் நிமோனியா போன்ற நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சீதாராம் யெச்சூரி சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 

உடல் தானம்

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"72 வயதான சீதாராம் யெச்சூரி கடந்த ஆக. 19ஆம் தேதி நிமோனியா காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (செப். 12) மதியம் 3.05 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி காரணங்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினரால் தானம் அளிக்கப்பட்டுள்ளது" என  குறிப்பிட்டுள்ளது. 

கல்லூரி டூ அரசியல் என்ட்ரி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளியல் படித்த சீதாராம் யெச்சூரி, கல்லூரி வாழ்க்கைக்கு பின் நேரடியாக அரசியல் களத்திற்குள் வந்தவர். இவர் சிபிஎம் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொலிட்பீரோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். மேலும், 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வானார்.

மேலும் படிக்க | மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! பல மாவட்டங்களில் ஊரடங்கு! பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

சீதாராம் யெச்சூரி 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆனால் இவரது குடும்பத்தின் பூர்வீகம் ஆந்திரா ஆகும். ஹைதராபாத்தில் வளர்ந்த சீதாராம் யெச்சூரி டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தனது மேற்படிப்படை மேற்கொண்டார். கல்லூரி காலத்திலேயே சீதாராம் யெச்சூரி, இந்திய மாணவர் கூட்டமைப்பில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

1975ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியபோது சீதாராம் யெச்சூரி தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் பல தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அதற்கு முன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றிருந்தார், அவரது முனைவர் படிப்பு முழுமையடையாமல் இருந்தது.

கூட்டணிகளில் முக்கிய பங்கு வகித்தவர்

சீதாராம் யெச்சூரி சிறையில் இருந்து ஒரு வருடத்தில் வெளியே வந்தார். அதன்பின் தொடர்ந்து மூன்று முறை JNU மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் இந்திய மாணவர் கூட்டமைப்பின் அனைந்திய தலைவராகவும் தேர்வானார். இந்த நேரத்தில்தான் அவர் பிரகாஷ் காரத்தையும் சந்தித்தார். பிரகாஷ் கரத், சீதாரம் யெச்சூரியின் வாழ்நாள் தோழராக இருப்பார் என அப்போது அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார். 1992ஆம் ஆண்டில் சீதாராம் யெச்சூரி பொலிட்பீரோ உறுப்பினர் ஆனார். 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹெச். டி. தேவகௌடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி அரசில், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை வகுப்பதில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களில் சீதாராம் யெச்சூரியும் ஒருவர். 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அமைப்பதிலும் சீதாராம் யெச்சூரி குறிப்பிடத்தக்க பங்குவகித்தார் எனலாம்.

தலைவர்கள் இரங்கல்

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரது X பதிவில்,"சீதாராம் யெச்சூரி ஒரு நண்பர். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் கூடிய இந்தியாவின் ஐடியாவின் பாதுகாவலர். நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X தளத்தில்,"தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர். சிறு வயதில் மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றதன் மூலம் அவரின் நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான மதிப்புகள் ஆகியவற்றின் காரணத்திற்காக அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்புமிக்க வாழ்க்கையாக நிற்கிறது.

அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.செவ்வணக்கம், தோழர்" என இரங்கலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: பேச்சுவார்த்தைக்கு கறார் காட்டும் மருத்துவர்கள் - முன்வைக்கும் டிமாண்ட் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News