லக்னோ: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சிங்ஹா போட்டியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது.
இன்று சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஏற்கனவே சத்ருகன் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநில தலைநகரம் லக்னோவில் பிஜேபி சார்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். SP-BSP கூட்டணி வேட்பாளராக பூனம் சிங்ஹாவும், காங்கிரஸ் வேட்பாளராக ஜிதீன் பிரசாத்தும் களம் இறங்குவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
லக்னோ தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி தேதி ஏப்ரல் 18 ஆகும். அந்த தொகுதிக்கு மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால் இன்று வரை சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் எல்லோருடைய கண்களும் லக்னோவை நோக்கி உள்ளன.
கடந்த 28 ஆண்டுகளாக லக்னோ தொகுதி பாரதீய ஜனதா கட்சி வசம் உள்ளது. அத்துடன் இந்த தொகுதியிலிருந்து முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி லோக் சபா பிரதிநிதியாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 தேர்தல்களில் வெற்றி பெற்று தேர்தேடுக்கபட்டார். 2009-ல் லால் ஜி டாண்டன் மற்றும் 2014 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் வெற்றி பெற்றனர். இம்முறை லக்னோவில் மீண்டும் ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார்.