Sexual Allegation On Nivin Pauly: கேரள திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பல்வேறு நடிகைகள் அடுக்கடுக்காக பாலியல் புகார்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நேரியமங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் அத்துமீறல் புகாரின் பேரில் நிவின் பாலி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிவின் பாலி மீது வழக்குப்பதிவு
மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி, நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் நிவின் பாலி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த வழக்கில் 6 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?
அதிர்ச்சியை கிளப்பிய 2017 சம்பவம்
2017ஆம் ஆண்டில் முன்னணி நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, மலையாள திரையுலகில் இதுபோன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து திரையுலகில் பணியாற்றும் பெண்கள் இணைந்து Women in Cinema Collective என்ற கூட்டமைப்பை தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு அளித்த பரிந்துரையின் பேரில் கேரளா அரசு மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண்களுக்கு நிலவும் பாலியல் கொடுமைகள், பாலின பாகுபாடுகளை ஆய்வு செய்து அதற்கு தீர்வு காண ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது.
ஹேமா கமிட்டி அறிக்கை
இந்த குழு பல்வேறு பெண்களிடம் விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை கடந்த 2019இல் அரசிடம் சமர்பித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்ய கேரள அரசு வேறு குழு ஒன்றையும் அமைத்தது. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்படாமல் கிடப்பில் இருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மாதம் கேரள அரசு ஹேமா கமிட்டி அதன் அறிக்கையில் குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய பகுதிகளையும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களையும் தவிர்த்து மீதம் இருந்த அறிக்கையை வெளியிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிவின் பாலியால் பாதிக்கப்பட்டதாக கூறும் அந்தப் பெண் அணுகி புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து எஸ்ஐடி ஊன்னுக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்து வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளது. இந்த சிறப்பு புலானய்வு குழு அமைக்கப்பட்ட பின்னர் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் பலரும் புகார்களை அடுக்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ