காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஜம்மு காஷ்மீர் செல்ல அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் அங்குள்ள நிலவரங்கள் குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதிக்க ஸ்ரீநகர் சென்றிருந்தார். விமான நிலையத்தில் இறங்கியதுமே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அவர் காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கிய நீதிமன்றம் ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, ஆனந்தநாக் ஆகிய பகுதிகளுக்கு அவர் செல்லலாம் என்றும் ஆனால் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிட்டது.