மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது!!
மும்பையின் கொலபா-பாந்திரா- சாந்தாகுரூஸ் இடையே செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ வழித்தடத்தின் பணிமனையை, நகரின் நுரையீரல் என்றழைக்கப்படும் ஆரே காலனி பகுதியில் அமைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்தது. அங்கு சுமார் 3 ஆயிரம் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, மரங்கள் வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. அங்குகூடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மரங்கள் வெட்டும் பணியைத் தடுத்து நிறுத்தவும் முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திய நிலையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டுவதை தடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட 29 பேர், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தலா 7 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாணவர்கள் குழு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அருண்மிஸ்ரா, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அவசர வழக்காக இன்று காலை விசாரணைக்கு வந்தது.
Supreme Court orders that status quo should be maintained regarding felling of trees at Mumbai's #Aarey Colony. pic.twitter.com/qrz3XQUp0j
— ANI (@ANI) October 7, 2019
அப்போது, மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களை விடுவிக்கவும், இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கை வரும் 21 ஆம் தேதித்துக்கு சிறப்பு அமர்வு ஒத்திவைத்துள்ளது.