மகாராஷ்டிரா தேர்தலில் சரிபாதி தொகுதிகளை அளிக்கவில்லை எனில் பாஜகவுடனான கூட்டணி முறியும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவிப்பு!!
சிவசேனா தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் வியாழக்கிழமை, வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சிவசேனாவுக்கு சரிசமமாக இடங்களை வழங்கத் தவறினால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதில் தங்கள் கட்சி கவலைப்படாது என்று கூறினார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபைக்கான தேர்தல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும் சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டு பாஜக 23 தொகுதிகளிலும் சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் 50-க்கு 50 எனத் தொகுதிப் பங்கீடு தேவை என சிவசேனா கட்சி கூறி வருகிறது. ஆனால், மக்களவை தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி பாஜக அதை மறுத்து வருகிறது. இதனால் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. ஆயினும் பாஜக தலைவர்களில் பலர் சிவசேனாவுக்கு பாதி இடங்களை அளிக்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக கூட்டணி அமைச்சரவையில் உள்ள அமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான திவாகர் ராவ்தே தங்கள் கட்சியினருக்கு 50% தொகுதிகளை ஒதுக்காவிட்டால் பாஜகவுடனான கூட்டணி தேர்தலுக்கு முன்பே உடையும் என அறிவித்தார். தற்போது இதே கருத்தை சிவசேனாவின் மற்றொரு மூத்த தலைவரான சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
Shiv Sena's,Sanjay Raut on Maharashtra Min Diwakar Raote's statement 'if Shiv Sena doesn't get half the seats then alliance could break':If 50-50 seat sharing formula was decided upon before Amit Shah Ji&CM,then his statement isn't wrong.Chunaav sath ladenge,kyun nahi ladenge pic.twitter.com/m2fbggbgyt
— ANI (@ANI) September 19, 2019
மேலும், சஞ்சய் ரவுத் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; “பாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் முன்னிலையில் சிவசேனாவுடன் 50-50 தொகுதிப் பங்கீடு முடிவு எடுக்கப்பட்டது. இதை பாஜக மதிக்க வேண்டும். நான் தொகுதி பங்கீட்டை வலியுறுத்துகிறேன். ஆனால் கூட்டணி முறிவை வலியுறுத்தவில்லை. ஆனால், சரிசமமாக தொகுதிகள் வழங்கவில்லை எனில் கூட்டணி முறியும் என்பதை மறுப்பதற்கில்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 144 தொகுதிகளை அதாவது சரிபாதி தொகுதிகளை கேட்கிறது சிவசேனா. ஆனால் பாஜகவோ 120 இடங்களுக்கு மேல் ஒரு இடம் கூட தரமுடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது.