அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமையேற்றியதற்காக ராஜஸ்தான் போலீசார் சரக்கு லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம்!!
மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, ஹெல்மட் அணியாமல் இருப்பது, வாகன உரிமம் இல்லாதிருப்பது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் முன்பைவிட பத்து மடங்கு அதிகமாக அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிக லோடு ஏற்றியதாக லாரி ஓட்டுனர் பகவான் ராமு என்பவருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Delhi: A truck owner from Rajasthan paid challan amount of Rs 1,41,700 at Rohini court on September 9 for overloading the truck on September 5. pic.twitter.com/2P4G9JqDgR
— ANI (@ANI) September 10, 2019
கடந்த 5 ஆம் தேதி ராஜஸ்தானை சேர்ந்த சரக்கு வாகனம் அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி டெல்லி போலீசார் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த தொகையை அவர் கடந்த 9 ஆம் தேதி ரோகினி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மோட்டார் வாகன சட்டப்படி அதிக அபராதம் விதிப்பதில் டெல்லி மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.