திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தின் 74வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மகன் கார்த்தி கடிதம்!!
INX மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார். இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், பாஜக அரிசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியும் விமர்சித்துள்ளார்.
அந்த கடிதத்தில், “அன்புள்ள அப்பா, இன்று உங்களுக்கு 74 வயதாகிறது. எந்த 56- ஆலும் உங்களைத் தடுக்க முடியாது ( முன்பு `பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது, `தான் 56 அங்குல மார்பு உடையவர் என்பதை மோடி காட்டியுள்ளார்’ என்று அமித் ஷா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). தற்போது நம் நாட்டில் மிகச் சிறிய விஷயங்களுக்குக்கூட பெரிதாகக் கொண்டாடுகிறார்கள், ஆனால் பெரிய விஷயங்களின் கொண்டாட்டத்தைக்கூட நீங்கள் விரும்பியதில்லை.
நீங்கள் எங்களுடன் சேர்ந்து இல்லாத இந்த பிறந்தநாள் எப்போதும்போல இருக்காது. நாங்கள் உங்களை அதிகமாக மிஸ் செய்கிறோம். நீங்கள் இல்லாதது எங்கள் இதயங்களைக் கனமாக்குகிறது. எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட, நீங்கள் விரைவில் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என விரும்புகிறோம். டெல்லி கேங்கிற்கு முன்னால் நீங்கள் ஒருபோதும் கப்சிப் என இருக்க மாட்டீர்கள். ஒரு வழியாக உங்களுக்குச் செய்தித்தாளும், குறைந்த நேரம் தொலைக்காட்சி பார்க்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன்.
My letter to my father @PChidambaram_IN on his birthday #HBDPChidambaram pic.twitter.com/LCTV2Br4Ha
— Karti P Chidambaram (@KartiPC) September 16, 2019
ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள். ஆனால், தற்போது அவர்களின் சுதந்திரம் பற்றி உங்களிடம் அதிகம் சொல்ல வேண்டும். வெளியில் என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தீர்கள். ஆனால், அது முடியவில்லை. நாங்கள் மிகவும் பெருமையுடன் அன்றைய நிகழ்வுகளைப் பார்த்தோம். அதில் நிறைய நாடகங்கள் இருந்தன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதில் எந்த நாடகமும் இல்லை. ஆனால், அதன் பிறகுதான் பெரிய நாடகம் நடந்தது” என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.